பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அகநானூறு - நித்திலக் கோவை


'பெரும்புலர் வைகறை என்றமையினாலே, இரவு முழுதும் உறக்கம் வாராதானாகி அவளையே நினைத்திருந்தவன் எனலாம். அவளும் தன்போலவே உறக்கமின்றிக் கலங்கியிருப்பாள் என்பதனை அவன் உணர்வதனையும் இது உணர்த்தும்.

மழையின் வரவினாலே நிலம் களிகொள்ளுகின்ற இயற்கைச் செல்வி நயமுறக் கூறப்பட்டிருக்கின்ற சிறந்த செய்யுள் இது. மழையைப் பெற்ற நிலம் சமனாகி அழகுற விளங்குவதனைச் செய்து விட்டன்ன செந்நிலம்’ என்கிறார். 'சிறுமறி தழீஇய’ தெறிநடை மடப்பிணை, வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, அலங்குசினைக் குருந்தின் அல்கு நிழல் வதியக் காண்பவள், தானும் தன் காதலனுடன் கூடியிருக்கப் பெறாத நிலைக்கு வருந்திக் கலங்குவாள் என்றறிக, நம்நோய் தன்வயின் அறியாள் என்ற வாசகத்திலே ஒலிக்கும் அவனுடைய ஏக்க மிகுதியையும் உய்த்து உணர்க. "அவள் அறியாள் என்றது, அறியமாட்டாத பேதைத் தன்மையுடையவள் என்று அவளை நினைந்து வருந்தியதுமாம். மாயோள்-மாமை நிறத்தையுடையவள்; திருமகள் எனினும் பொருந்தும்; அவளும் எப்போதும் மாயவனின் மார்பிடத்தவளாகவே பிரியாதவளாக நிலவுதலால்.

305. கனலும் உள்ளம்!

பாடியவர் : வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்; வடம வண்ணக்கண் பேரிசாத்தனார் எனவும், வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தன் எனவும் உரைக்கப்படும். திணை : பாலை. துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைவி சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியது உம் ஆம்.

(தலைமகன், தலைவியைப் பிரிந்து போவதற்கான ஏற்பாடுகளிலே இருக்கின்றான்' என்பதை அறிந்தபோது, எழுகிற குமுறல் இது. தலைவி, அப்போது, தான் ஆற்றியிருக்க மாட்டாத நிலையினை இவ்வாறு அவள் தோழிக்குக் கூறுகின்றனள். அன்றித், தலைமகனின் பிரிவுக்காலத்திலே, தோழி அதனைக் குறிப்பிட்டுத் தலைவிக்கு அவளைத் தேற்றுவாளாகச் சொல்லியதுமாம்.)

          பகலினும் அகலா தாகி யாமம்
          தவலில் நீத்தமொடு ஐயெனக் கழியத்
          தளிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு