பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 231



வந்த பொழுதிலே -

பூக்கள் மலர்ந்த அரிய கழியிடத்தே அசைந்து கொண்டிருக்கும் இலைகளோடு, கடல் தந்த நெடிய தன்மையினையுடைய நெய்தலின் முதிராத இளங்கள் நாறும்படியாகப் பொதியவிழ்ந்த தண்ணிய மலர்களை, ஏனைப் பூக்கள் பலவற்றுடனும் அவன் சூடிவருதலைக் கண்டு-பழைய பெருமையினையுடைய, ஆரவாரம் மிகுதியாக விளங்கும் கடற்கரைக் கண்ணிடத்துள்ள, நீண்ட கரிய பனைமரங்களையுடைய ஆரவாரங்கொண்ட நம்முடைய ஊரானது, அலரினை விடுத்து, மிகவும் புதிய தன்மையினை உடையதும் ஆகின்றது! இது பெரிதும் நகையினை உடையதாகும்.

சொற்பொருள்: 1. நகை நன்று-நகை பெரிது. 2 அல்கினும்தங்கினும். நயந்து-விரும்பி 3. கானல்-கானற் சோலை. 5. நூல்- புரவிநூல். உத்தி-நெற்றிச் சுட்டி 6எருத்தம்-பிடரி, 7. முனை இய-வெறுத்த. குவவுத்தலை-வளைந்த தலை. 11.பல்படை - பலவடுக்கான மணியாரங்கள். 12. மதியுடைய வலவன்-குதிரை செலுத்தும் திறன் அறிந்தோனாகிய பாகன். 15. ஊதை-காற்று. 20. அடை-இலை. 21.நேமி-கடல். 24.பழவிறற்பாடு-பழைய பெருமையுள்ள ஆரவாரம். இரங்கும்-ஒலிக்கும்.

விளக்கம் : 'மனையிறந்து அவனொடு அல்கினும் அலரெனக் கூறும் அழுங்கல் ஊரானது, மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை நன்றும் புதுவதாகின்றம்ம!’ எனத் தம் ஊரவரின் இருகாலத்துத் தன்மையுனையும் ஒப்பிட்டு, அவரின் இயல்புக்கு, 'நகை நன்று அம்ம!’ என நகையும் கொள்ளுகின்றனள் தோழி. இது, அக் காலத்துச் சமூகம் உண்மைக் காதலொடு நிகழும் களவு உறவினையும் பழிதரும் செயலாகவே கொண்டிருந்த தென்பதும், மணவினை குறித்து அவன் வரவே, அந்தப் பழியை மறந்து அவனைப் புகழ்ந்து பாராட்டிய தெனவும் காட்டுவதாகும்.

'தாழ்ந்த துறையிடத்து நீர்புகுவதுபோலத் தாவிச் செல்லும் குதிரைகள்' எனக் குதிரைகளின் விரைவுடைமையைக் குறித்தது காண்க.

அகநானூற்றின் நித்திலக் கோவையும்
புலியூர்க் கேசிகன் உரையும் முற்றுப் பெற்றன.
****

16