பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

அகநானூறு - நித்திலக் கோவை


குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவராதலால் அக்காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் ஆகலாம். இப்பாடல்கள் இரண்டும் முல்லைத்திணையைச் சார்ந்தவை. பாசறை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்கும், பாகற்கும் சொல்லியதாக அமைந்தவை.374ஆவது செய்யுளுள், கார்காலத்து வருகையினை இவர் கூறியுள்ள நயம் அறிந்து இன்புறற்பாலது ஆகும். காயாஞ் செம்மலிடையே தம்பலப்பூச்சிகள் ஒடுவது, ‘மணிமிடை பவளம் போலத் தோன்றும்' என்ற வருணனை, இவ்விரு (304, 370) செய்யுட்களிலும் இவராற் கூறப்பெற்றிருத்தலையும் நாம் காணலாம்.

இடையன் சேந்தங் கொற்றனார் (375)

இடையன் செங்கொற்றனார் எனவும் இவர் பெயர் வழங்கும். இடையர் மரபினர் என்பதனைப் பெயரமைதி உணர்த்தும். 'கொற்றனார்’ என்ற சொல், இவர் பேராண்மை மிக்கவர் என்பதனை உணர்த்துவதாம். இவர் செய்யுளுள் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவன் செம்புறழ் புரிசைப் பாழியை அழித்து, வம்ப வடுகர் பைந்தலை சவட்டி வென்ற செய்தி கூறப்பெறுவதனைக் காணலாம். இதனால், இவரையும் அந்தப் போரில் சோழனுக்கு உறுதுணையாக விளங்கிய சிறப்பினர் எனக் கருதலாம். இந்தச் செய்யுள் ஒன்றுமட்டுமே இவராற் செய்யப் பெற்றதாகச் சங்கத்தொகை நூற்களுள் காணக் கிடைப்பதாகும். ஆறலைக்கும் கள்வருடைய இயல்பினை, 'அம்புதொடை அமைதிகாண்பார், வம்பலர் கலனியர் ஆயினும் கொன்று புள்ளுட்டும் கல்லா இளைஞர்' என உரைக்கும் திறத்தினை இவர் செய்யுளுட் காணலாம்.


இம்மென் கீரனார் (393)

'கீரனார்’ என்ற சொல் இவரைக் கீரர் குலத்தவர் எனக் காட்டும். மற்றும் இவருடைய இயற்பெயர் யாதும் அறிதற்கு இயலவில்லை. சங்கறுக்கும் தொழிலோராக விளங்கி வந்தவர் இக்குலத்தினர். இச்செய்யுள் ஒன்றே இவர் பெயராற் காணப்பெறுவது. இதன்கண், 'நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று அலமரல் மழைக்கண் தெண்பனிமல்க' என்று தலைவி கூற்றாக இவர் கூறுவது கொண்டு இவரை 'இம்மென் கீரனார் என்று குறித்தனர் போலும். தலைமகள், தலைமகனின் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, 'நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் பன்மலர் போர்த்து, நாணுமிக ஒடுங்கி மறைந்தனை எந்தை பல்பூங்கானத்து அல்கி இன்றிமண் சேர்ந்தனை செலினே, சிதைகுவது உண்டோ?' எனக் கூறுவதாக அமைந்த நயத்தினைக் கற்று மகிழ்க’