பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 239


பறந்தலையில் வெற்றிகொண்டு திதியனின் காவன் மரமான புன்னையை வெட்டிய செய்தியை இவர் (அகம் 145) கூறுவதனால், அவர்கள் காலத்தவர் எனலாம். அம்மன் கோயிற் பூசாரியாக முதுகுயவர்கள் விளங்கினர் என்ற செய்தி இவரது நற்றிணைச் செய்யுளாற் (293) புலனாகும். மகட்போக்கிய தாயும் செவிலியும் புலம்புதலாக வரும் இந்நூற் செய்யுட்கள் தாய்மையின் பெரும்பிணிப்பினைக் காட்டுவனவாகும்.


கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் (309)

கொங்கு நாட்டுக் கருவூரைச் சார்ந்த புலவர்களுள் இவரும் ஒருவர். கதப்பிள்ளைச் சாத்தனார் எனவும் வழங்கப் பெறுவர். பெயரினாலே, இவரோர் புத்த சமயத்தவராக இருக்கலாம் என்பர். இவர், பிட்டங் கொற்றன் என்பான் ஒருவனையும், வானவனாகிய சேரனையும் பாடியவர். பிட்டங் கொற்றனைப் பாடியோர் உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடமவண்ணக்கன் தாமோதரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிகண்ணனார் ஆகியோரும். ஆகவே, இவரும் அப்புலவர்கள் காலத்தவர் ஆகலாம். இச்செய்யுளுள், 'கூத்தர்கள் பெரும் படைக் குதிரை நற்போர் வானவனின் திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு' என, அவனுடைய வள்ளன்மையைக் குறித்துள்ளனர். 'வேப்பமரத்திலே சார்ந்திருக்கும் தெய்வமும், அதற்கு மறவர் ஆப்பலி இட்டு வழிபடும் செய்தியும்' இதனிடத்து இவராற் சொல்லப்பட்டுள்ளன.


கல்லாடனார் (333)

'கல்லாடம்' என்னும் பாண்டிநாட்டு ஊரினர் இவர் என்பர். தொல்காப்பிய உரை ஆசிரியர்களுள் இவரும் ஒருவர் என்பர். சங்கத்தொகை நூற்களுள் இவர் பாடியவாகப் பதினான்கு பாடல்களைக் காணலாம். அம்பர்கிழான் அருவந்தை, முள்ளூர் மன்னன் காரி, ஒரி, அஃதை, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புல்லி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆகியோர் இவராற் பாடப் பெற்றோராவர். 'கல்லாடம்’ இயற்றிய கல்லாடர் வேறு; இவர் வேறு. பதினோராம் திருமுறைப் பாடல்களைப் பாடியவர் இவ்விருவரினும் வேறானவர் ஆவர்.


காவட்டனார் (378)

இவர் பாடியவாகக் காணப்பெறுவன சங்கநூற்களுள் இரண்டு செய்யுட்கள் ஆகும். இவராற் பாடற்பெற்றோன் அந்துவன் கீரன் என்போன்ஆவன். "காவட்டு" என்பது தோளின் இருபுறத்தும் சம எடையிற் சுமை தூங்க, இரண்டையும் இடையிலே மூங்கிற்கோலால் இணைத்துத் தாங்கிச் செல்லும்