பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 241


சேந்தங் கண்ணனார் (350)

இவர் இயற்பெயர் கண்ணனார் எனவும், சேந்தன் என்பவரின் மகனார் இவரெனவும் கருதலாம். 'கண்ணன்' என்ற பெயருடையார் சங்ககாலத்துப் பலராவர். அவர்களுள் வேற்றுமை காட்டச் சேந்தன் என்ற அடைமொழியுடன் வழங்கினர் போலும்! இவர் பாடிய செய்யுட்களாகச் சங்க நூற்களுள் இரண்டு காணப்பெறும். இந்நூற் செய்யுளுள், கொற்கைத் துறையிலே முத்தெடுக்கும் செய்தியைக் குறித்து, 'இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர், ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்' என்று சொல்வது, மிகவும் நயம் உடையதாகும்.

தங்கால் முடக்கொற்றனார் (355)

பாண்டி நாட்டுத் திருத்தங்கால் என்னும் ஊரினராகப், பெரும் புலமைச் செறிவுடையாராக விளங்கியவர் இவர். தங்கால் முடக்கோவனார் எனவும், முடக் கொல்லனார் எனவும் இவர் பெயர் வழங்கும். இவர் பாடியவையாகச் சங்க நூற்களுள் ஆறு செய்யுட்கள் காணப்பெறும். பருத்திப் பெண்டின் செய்தியைச் சுவைபடக் கூறியதும், காந்தளின் நறுமலரில் ஆடுந் தும்பியானது கையாடும் வட்டில் போலத் தோன்றும் என்பதும் இவரால் நயமுடன் சொல்லப் பெற்றன. இச்செய்யுளுள், வேனிலின் வருகையை நயமுடன் கூறியிருக்கின்றனர். 'யாமே எமியம் ஆக, நீயே பொன்நயந்து அருளிலையாகி இன்னை யாகுதல் ஒத்தன்றால் எனப் புலந்தனம் வருகம்' எனத் தலைவி கூறுவதன்கண். அவளுடைய பிரிவு ஆற்றாமையின் மிகுதியினை நாம் நன்கு காணலாம்.

தாயங் கண்ணனார் (319, 357)

சோணாட்டு எருக்காட்டுர்த் தாயங்கண்ணனார் எனவும் இவர் வழங்கப்பெறுவர். எருக்காட்டுர், தஞ்சை மாவட்டத்து நன்னிலப் பகுதியில் உள்ளதாகும். தமிழர் யவனர் வணிகத் தொடர்பையும், மற்றும் பல வரலாற்றுச் செய்திகளையும் இவர் செய்யுட்களுள் நாம் காணலாம். 'கொய்குழைத் தளிரேர் அன்ன தாங்கரும் மதுகையள் மெல்லியள்; இளையள்; நனிபேர் அன்பினள்; செல்வேம் என்னும் நும்மெதர் ஒழிவேம் என்னும் ஒண்மையோ இவளே'எனத் தலைவியின் நிலையையும் (319), 'உம்பற் பெருங்காடு இறந்தனராயினும் யாழ! நின் திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி உள்ளாது அமைதலோ இலரே' எனத் தோழி தேற்றுவதும் (357) இந்நூற் செய்யுட்களுள் நயமுற இவராற் சொல்லப்பட்டுள்ளன.