பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 243


இவராவர். 'கணி மேதாவியார்’ என்றாற்போல வரும் பெயர் வழக்குக்கள் இதனை உணர்த்துவனவாம். இச்செய்யுளின் கண், 'ஈயல் பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு' ஆக்குவதனை இவர் முறையாகக் கூறியுள்ளனர். காடுறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் மடிவிடு வீளைவெருவிக் குறுமுயல் மன்ற இரும்புதல் ஒலிக்கும்' என்ற செய்தியின் அமைதி, இவரையும் முல்லைநிலத்தவர் எனக் கருதுமாறு நம்மைத் தூண்டுகின்றது.

பரணர் (322, 326, 356, 367, 372, 386, 396)

இவர், பாணர் மரபினராகக் கபிலரோடு சேர்த்துக் கபில பரணர் எனப் பாராட்டும் புகழுடையவராகத் திகழ்ந்த சான்றோர் ஆவர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன், குடக்கோ நெடுஞ் சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி ஆகியோரும் மற்றும் பலரும் இவராற் பாடப்பெற்ற சிறப்பினராவர். பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தினைப் பாடிச் சேரமான் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற் காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசிலாகப் பெற்றவர் இவராவர். இந்நூற் பாக்களுள், திதியன் (322), போஒர் கிழவோன் பழையன் (326), வல்லம் கிழவோன் (356), அதியமான் அஞ்சி (372), அத்தியைக் காவிரி கொண்டது (376), குட்டுவனின் மாந்தைச் சிறப்பு (376). பாணனும் ஆரியப் பொருநனும் ஆற்றிய மற்போரிடைக் கணையன் நாணியது (386). ஆஅய் எயினன் மிஞலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தது (396) எனப் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளைக் காணலாம். செங்குட்டுவனின் வடபுலப் போரெழுச்சியை உரைப்பார் போன்று, 'ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி என இவர் கூறுவது, சிலப்பதிகாரச் செய்தியை அரண்செய்து சான்று பகர்வதைக் காணலாம்.

புறநாட்டுப் பெருங் கொற்றனார் (323)

இவரைப் புறநாட்டுப் பெருங்கொற்றனார் எனவும் வழங்குவர். பெருங்கொற்றனார் என்பாருள் இவரைத் தனித்துக் குறிக்க இப்பெயரடை தந்தனர் போலும். பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி காலங்காட்டி வற்புறுத்தும் முறையிலே அமைந்த இச்செய்யுள் சுவையுடையதாகும். 'கற்பு மேம்படுவி' எனத் தலைவி குறிக்கப்படுவது மிக்க நயமுடன் அமைந்துள்ளதனைக் காண்க.