பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 245


வென் வளையே' என்பதிலிருந்து, ஆரியரைச் சோழர் வெற்றி கொண்ட போர்ச் செய்தியினை நாம் இவர் செய்யுளால் அறிகின்றோம்.

பிசிராந்தையார் (308)

பாண்டி நாட்டவரான இவர், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சான்றாளரும், புலமையாளருமாக விளங்கியவர் ஆவர். கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்தபோது உளத்தாற் கலந்த நட்புடைய இருவரும் சென்று வடக்கிருந்து உயிர் துறந்தவர். அறிவுடை நம்பிக்கு இவர் சொல்லிய அறமும் (புறம். 184), நரையிலவாதற்கு இவர் கூறும் காரணமும் (புறம். 191), மிகவும் நுட்பம் வாய்ந்தவையாகும். 'வருவன என்ற கோனது பெருமையும், அது பழுதின்றி வந்தவன் அறிவும், வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே' என்று இவருடைய அறிவுத் திறத்தைப் பாராட்டுவர் பொத்தியார் (புறம் 271). இச்செய்யுளின் கண், 'மலையருகிலஞ்சுடு மட்கலத்தைச் சுட்டுச்செய்யும் தொழில் நன்கு நிலவியதனை நாம் அறியலாம்.

பொருந்தில் இளங்கீரனார் (351)

சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பாடியவர் இவராவர். அகநானூற்று 19ஆவது செய்யுளும் புறநானூற்று 53ஆவது செய்யுளும் இவர் பாடிய பிற செய்யுட்கள் ஆம். இவருடைய அடக்கம் மிகவும் பெரிது. அதனைப் பொறைய விரும்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும் மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை கைமுற்றல நின் புகழே; என்றும் ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து வாழேம் என்றலும் அரிதே' என்ற இவர் சொற்களாற் காணலாம். 'செய்குறியாழி வைகல்தோறு எண்ணி, எழுது சுவர் நனைத்த அழுதுவார் மழைக்கண்' எனத் தலைவியின் பிரிவுத்துயரை இவர் இச்செய்யுளுட் காட்டுவது மிகவும் நயம் உடையதாகும்.

மதுரை, அளக்கர்ஞாழார் மகனார் அம்மள்ளனார் (315, 345, 353) -

மதுரைக்கண் இருந்தவர் இவர், அளக்கர்ஞாழார் என்பவரின் மகனார். புறநானூற்று 388 ஆவது செய்யுளிற் சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடியுள்ளனர். இச்செய்யுட்கள் மூன்றனுள் இரண்டு முல்லைத்திணைச் செய்யுட்கள். 353 ஆவது செய்யுள் பாலைத்திணை பற்றியது. "நாளும் கனவுக் கழிந்தனையவாகி, நனவின் நாளது செலவும், மூப்பினது வரவும், அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும், இந்நிலை அறியாய் ஆயினும். சுரனிறந்து உள்ளுவை அல்லையோ?” எனத் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைக்கும் உடனுறை வாழ்வின் செப்பம் சிந்தித்து இன்புறற்பாலதாகும்.