பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 247


கூறியுள்ளனர். இப்பாடலன்றி நற்றிணை 351அவது செய்யுளும் இவர் பெயரான் வழங்குவதாம்.

மதுரைக் கணக்காயனார் (338, 342)

மதுரையில் கணக்காயனாராகத் திகழ்ந்த சான்றோர் இவராவர். இவருடைய மகனாரே புலவர் தலைவராகத் திகழ்ந்த நக்கீரனார். இவர் பாடியவாகக் காணப்பெறுபவை சங்கநூற்களுள் ஐந்து செய்யுட்கள் ஆகும். 'ஒன்னார் தேயம் பாழ்பட நூறும், துன்னரும் துப்பின் வென்வேற் பொறையன், அக்லிருங் கானத்துக் கொல்லி', 'பலர்புகழ் திருவிற் பசும்பூண் பாண்டியன் அணங்குடை உயர்நிலைப் பொருப்பு’, 'தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கம்’ என மூவேந்தரையும் இவர் சிறப்பிப்பர் (338) தெனாஅது வெல்போர்க் கெளரியர் நன்னாடு (342) எனவும், 'முத்துப்படு பரப்பிற் கொற்கை '(நற் 23) எனவும் பாடுவர். இதனால், இவருடைய தமிழ்ச் செறிவோடு கெழுமியிருந்த நாட்டுப்பற்றும் நன்கு புலனாகும்.

மதுரைக் கூத்தனார் (334)

மதுரைக்கண், கூத்தியற்றும் கலைஞராக விளங்கிவந்த புலவர் இவர். மழைபெய்தலைக் குறிக்கும் இவர், 'வணங்கிறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆலியொடு கதழுறை சிதறி' என்பார் (334) இது இவரது கூத்தராய தன்மைக்குச் சான்று பகர்வதும் ஆகும்.

மதுரைக் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் (306, 320)

சிலப்பதிகாரக் கதையினை இளங்கோவிற்கு உரைத்தவ ராகவும், மணிமேகலைக் காப்பியத்தைச் செய்தவராகவும் கருதப்படுவர் இவர். 'சீத்தலை' என்னும் சேரநாட்டு ஊரினர் என்று கொள்வர். எனினும் 'மதுரை' என்று சொன்னமையால், 'சீத்தலை' அங்ஙனமாகாது எனவும் உரைப்பர். இவர் இயற்றியவாகக் காணப்பெறுவன பத்துச் செய்யுட்கள் ஆகும். 'சேர்ப்ப! எந்தோழி மலரேர் உண்கண் எவ்வம்' 'அலர்வாய் நீங்க அருளாய் பொய்ப்பினும்-வந்து நீ தோள் புதிது உண்ட ஞான்றைச் சூழும் பொய்யோ?' என உரைக்கும் தோழி கூற்று, அந்நாளிற் சூழ்பொய்த்தலை வெறுக்கும் தன்மை நிலவியதைக் காட்டுவதாகும்.

மதுரைத் தந்தங் கண்ணனார் (335)

இவர் செய்தது இச்செய்யுள் ஒன்றேயாகும். இதன்கண் கமுகின் பசுங்காய் ஈனுதலைக் குறித்து நயமுடன் உரைத்தவராக,

17