பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

அகநானூறு - நித்திலக் கோவை


'அப்பசுங்காய் நீரினும் இனியவாகிக் கூரெயிற்று அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய் ஒண்தொடிக் குறுமகள்' எனக் காதலியின் வாயூறலைக் குறிக்கும் சிறப்பினைக் காணலாம். மதுரைப் புலவரும், கண்ணனாரும் ஆகிய இவரைப் பிற கண்ணனார் களினின்றும் வேறுபடுத்திக் குறிப்பிடுவதனைக் கருதி, மதுரைத் தத்தங் கண்ணானார் என்றனர் போலும்.

மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் (354)

இவரும் மதுரைப் புலவர்கள் பலருள் ஒருவரேயாவர். ஆரியக்கூத்து தமிழ்க்கூத்து என வழங்கிய கூத்துவகைகளுள், இவர் தமிழ்க் கூத்தின்கண் சிறந்தவராக விளங்கியவர். சங்கத் தொகை நூற்களுள் இவர் பாடல்களாக நான்கு செய்யுட்கள் காணப்பெறும். இந்நூற் செய்யுளுள், வினை முற்றிய தலை மகனுக்கு உழையராவார், 'வெற்றி வீரனாகத் திரும்பும் இவளை எதிர்ந்த பின்னர், இவன் காதலியின் திருமுகத்தைக் கைப்பற்றியிருக்கும் பசப்பு எங்குச் சென்று வாழுமோ? என வருந்துவதாகக் காதலன் வரவாற் காதலியின் பசலை நோய் அகலும் என்பதனைக் கூறியுள்ளனர். இவர்.

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் (328)

இவரை ஈழன் தேவனார் எனவும் வழங்குவர். மதுரைக்கண் பண்டவாணிகராக இருந்து, அதே சமயம் புலமைச் செல்வ ராகவும் விளங்கியவர் இவர். அகநானூறுக் களிற்றியானை நிரையின் 58ஆவது செய்யுளுள், 'உன்னைத் தழுவுவதினும், உன்னை நினைத்திருக்கும் அதுவே இனிது’ எனக் காதலி கூறுவதாக வருவது மிக்க இனிமையுடையதாகும். தலைவன் பிரிவதனை முன்பே அறிந்ததால், தழுவுந்தொறும் தழுவுந் தொறும் உயங்க முகந்துகொண்டு அடக்குவம் எனத் தலைவி வருந்துவதாக இச்செய்யுளுள் வருவதும் நயமுடன் அமைந் திருத்தலை அறிந்து இன்புறுக

மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் (363)

மதுரை நகரத்தின்கண் பொற்கொல்லராகப் பணியாற்றிய புலவர் இவராவர். பிரிந்திருக்கும் தலைவி, மாலையின் வரவினாலே கழிபடர் காமத்தளாகி வாடிய நிலையினைப் 'பொழுதுகழி மலரிற் புனையிழை சாஅய், அணையணைந்து இனைய ஆகுதல் என நயமுடன் கூறுபவர் இவர். நெல்லிக் காய்கள் காற்றால் உதிர்க்கப்பெற்று வீழ்ந்து கிடப்பதனைப் பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம், எனவும் உரைப்பர். மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் எனவும் இவர் பெயர் வழங்கும். நற்றிணை 285 ஆவது செய்யுளும் இவர் செய்ததேயாகும்.