பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 249


மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் (364)

மதுரை மருதங்கிழார் என்பாரின் மகனார் இவர் மற்றும் சொகுத்தனார் என்பாரும், இளம்போத்தன் என்பாரும் மதுரை மருதங்கிழார் மகனார் எனக் கூறப்பெறுபவராவர். அதனால், இவர்கள் மூவரையும் உடன் பிறந்தாராகக் கொள்ளல் பொருந்தும். இவர் பாடியன இச்செய்யுளும், அகநானூற்று 247ஆவது செய்யுளும், நற்றிணை 383ஆவது செய்யுளும் ஆகும். இச் செய்யுளுள், மழைக் காலத்துத் தேரை ஒலிப்பதனை, 'ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க எனவும், மாலையின் வரவினால் வருந்திய தலைவி, 'கொலை குறித்தன்ன மாலை துணைதரு போழ்தின் நீந்தலோ அரிதே' எனக் கூறுவதாகவும் இவர் நயமாக உரைத்துள்ளனர்.

மதுரை மருதன் இளநாகனார் (312, 343, 358, 365, 368, 380, 387) இவர் மருதம் பாடுவதில் வல்லவராக விளங்கியவர். நாகனார் என்னும் பெயரினர். மருதக்கலியினைப் பாடியவர் இவரே என்பர். அஃதன்றியும் சங்கத்தொகை நூற்களுள் 37 செய்யுட்கள் இவர் பாடியவாக விளங்கும். இறையனார் களவியலுக்கு உரை செய்தாருள் இவரும் ஒருவர். பிட்டன், கழுவுள், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், கூடாகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி ஆகியோரைப் பாடியவர். இல்லத் தலைவியரின் சிறப்பினை, கடவுட் கற்பொடு குடிக்கு விளக்காகிய புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்னராட்டி எனப் போற்றிக் கூறியவர் இவர். இந்நூற் செய்யுட்களுள், 'ஒன்னார் ஒடுபுறங் கண்ட தாடோய் தடக்கை வெல்போர் வழுதி எனப் பாண்டியனின் சிறப்பினையும் (312), 'நடுகற் கண்ணி வாடிய மண்ணா மருங்குல் கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து' என நடுகற்களில் பற்றிய உளியால் செதுக்கப்பெற்ற வீரர்களின் பீடும்பெயரும் பற்றிய செய்தியையும் (343), 'கொங்கர் மணியரை யாத்து மறுகின் ஆடும் உள்ளிவிழாப் பற்றிய செய்தியையும் (368), பல்லிச்சொல் தீய பலனுடையதாயின் வழிச்செல்பவர் மேற்செல்லாது திரும்புவர் என்ற செய்தியையும் (387) நாம் காணலாம்.

மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார் (327) இவர் பாடியவாகக் கிடைத்துள்ளது இச்செய்யுள் ஒன்றேயாகும். மருங்கூர்ப் பாகை என்பதும், மருங்கூர்ப் பட்டினம் என்பதும் ஒன்றாகக் கருதுபவரும் உளர். எனின், அவ்வூரினைச் சார்ந்தவர் இவர் என்க. இந்த மருங்கூர்ப்பட்டினம்