பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

அகநானூறு - நித்திலக் கோவை


தழும்பனுக்கு உரிய ஊனுருக்கு அப்பாலுள்ளதெனவும், சிறந்த செல்வங்கள் நிலைபெற்ற பெருமை கொண்ட வளநகர் எனவும், பெரிய உப்பங் கழிகளாகிய தோட்டக்கால்களை உடைய தெனவும் நக்கீரனார் உரைப்பர் (அகம் 277). இச்செய்யுளுள் ஆறலைப்பாரின் கொடுந் தன்மையினைச், 'சென்றோர் செல்புறத் திரங்கார், கொன்றோர் கோல் சுழிபு இரங்கும் எனக் குறிப்பர் இவர்.

மாமூலனார் (311, 325, 331, 347, 349, 393) அந்தணர் மரபினர் எனவும், முக்காலமும் உணருகின்ற யோகசித்தி பெற்றவர் எனவும் இவரைக் கூறுவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகியோர் காலத்தவர். திருமந்திரம் பாடியவர் இவரின் வேறானவர் அவர். இவர் பாடல்களுள் சிறந்த செய்திகள் பலவற்றை நாம் காணலாம். அகத்துள் 27-ம் குறுந்தொகையுள் ஒன்றும், நற்றிணையுள் 2ம் இவர் பாடியவை. புல்லி, அள்ளன் அதியன், பாணன், திதியன், சேரலாதன், நன்னன், வானவரம்பன் ஆகிய பலரையும் பற்றிய குறிப்புக்களை இந்நூலின்கண்வரும் இவர் செய்யுட்களுள் நாம் கண்டு இன்புறலாம்.

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலாத்தனார் (377) மாறோக்கத்தின்கண் காமக் கணியராக இருந்தவர் இவர். இவர் செய்ததாக விளங்குவது இச்செய்யுள் ஒன்றேயாகும். இச்செய்யுளுள், நரை மூதாளர் ஊர் மன்றிலே கவறாடிப் பொழுது போக்கும் செய்தியினையும் ஆறலை கள்வர் எறும்பளையின்கண் அவை தொகுத்து வைத்த புல்லரிசி யினையும் கவரும் இயல்பினர் என்பதனையும் கூறியுள்ளனர். இவ்வூரினரான மற்றொரு புலவர் மாறோக்கத்து நப்பசலையார் என்னும் அம்மையாராவார். அவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், மலையமான் திருமுடிக் காரியையும் பாடியவர்.

மோசிகீரனார் (392) "மோசி என்னும் அடைமொழியுடன் வழங்கும் புலவர்களுட் சிறப்பானவர் இவர். நன்னன், ஆய், சேரமான் தகடூர் எறிந்த கணைக்கால் இரும்பொறை, கொண் கானங்கிழான் ஆகியோரைப் பாடியவர், முரசு கட்டிலில் அறியாது ஏறிய இவர் துயில் எழுந்துணையும், கவரிகொண்டு வீசினன் சேரமான் என்பதனைப் புறநானூற்று 50ஆவது செய்யுளுட் காணலாம். 'நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம் என்ற செய்யுளைச் செய்த சான்றோர் (புறம் 186) இவரே. இச்செய்யுளுள், தோற்றம்