பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

அகநானூறு - நித்திலக் கோவை


அரையிலே மணிகோத்தாராகத் தெருவின்கண் ஆடிக் கொண்டாடுகின்ற உள்ளி விழவினைப்பற்றிக் குறிப்பிடுகின்றனர். அந்த விழவின் ஆரவாரம் பெரிதாயிருக்கும். அது, உள்ளிவிழவின் அன்ன அலராகின்றது என்பதனால் விளங்கும்.

கோதை மார்பன் (346)

சேரமான் கோக்கோதை மார்பன் தொண்டிக்குத் தலைவனாக விளங்கிப் பொய்கையாராற் பாடிப் போற்றப் பெற்றவன். இச்செய்யுளுள் குறிக்கப்பெறுபவன் சேரர் தளபதிகளுள் ஒருவனாக இருந்தவன். முதலில் பழையன் மாறன் என்னும் பாண்டியர் தளபதிக்குத் தோற்று ஓடியவன். பின்னர் அந்தப் பழையன் மாறனின் வீழ்ச்சியைக் கேட்டபோது இவன் உவப்படைந்த செய்தி இச்செய்யுளுட் கூறப்பெற்றிருக்கிறது.

செழியன் (335)

இவன் பாண்டியருள் ஒருவன். இவன், வெற்றிபொருந்திய முரசினையும், விரிந்த மலர்த்தாரினையும் உடையவன். இவனுடைய மாடமூதூரான மதுரையின் மதிற்புறத்தினைத் தழுவி வளர்ந்த கமுகினை அழகாக இச்செய்யுளுட் குறிப்பிடுவர். இதன் ஆசிரியரான ததையங் கண்ணனார்.

சேரலாதன் (347)

கடலிடையே பகைத்து வந்தாரை அழித்து, அவருடைய கடம்பினை வெட்டி, நன்னகர் மாந்தை முற்றத்தே அப்ப்கைவர் திறமையாகக் கொணர்ந்து நிதிபலவும் குவித்துப் போற்றப் பெருமையுடன் வாழ்ந்தவன் இவன். இச்செய்யுளுள், இவன் கடற்கண் பகைவரை வென்று, அவர்களின் காவல் மரத்தை அறுத்து இயற்றிய வெற்றிமுரசத்தின் ஒலி முழக்கத்தை மாமூலனார் குறிப்பிடுகின்றனர்.

சோழர் (326, 336, 338, 356, 369,375, 385)

சோழர்கள் எனப் பொதுவாகக் குறித்துச் சொல்லப்பட்ட செய்யுட்கள் இவை. போஒர் கிழவன் இவர்களின் தளபதியருள் ஒருவன் (326) என்பதும், வல்லத்துப் புறங்காட்டிற் சோழர் ஆரியரை வென்றமையும் (336), சோழரது பொருண்மலி பாக்கமும் (338), வல்லங் கிழவோன் இவர் மருகன் என்பதும் (356), கடலந்தானைக் கைவண் சோழரது உறந்தையின் கெடலரும் சிறப்பும் (369), சோழர் பெருமகனான இளம்பெருஞ் சென்னியின் பாழிகொண்ட செய்தியும் (375), கைவல்யானைக் கடுந்தேர்ச் சோழரின் பொன்னுடை நெடுநகரான உறந்தையின் எழிலும் (385) இச்செய்யுட்களுள் கூறப்பெற்றிருப்பக் காணலாம்.