பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 17


உறங்கும் நீர்சூழ் வளவயல் என்றது, தலைவனும் அவ்வாறே குறியாத இன்பத்தினை எளிதிலே எய்துதற்கு உரியவன் என்பதனாலாம். இதனால், தோழி வாயில் மறுத்தனளேனும், அவனுக்குத் தலைவியை இசைவிக்கவே உள்ளத்தில் விருப்பம் உடையவள் என்பதும் புலப்படும். கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயில் கொள்ளும் என்றது கரும்பின் இனிமையை அறியமாட்டாத அது, அதனைவிட்டு ஒதுங்கிச் சிறிதுபோதிலே இல்லாது போகின்ற பசுவெயிலின் இனிமை யினை நுகர்ந்தபடி கிடப்பதுபோலத், தலைவன் தலைவியையும் இல்லத்தையும் மறந்து, புல்லிய பரத்தை யின்பத்தை நாடிச்செல்லும் பேதமையாளனாயினான் என்று பழித்ததாம்.

விளக்கம் : “மதியேர் ஒண்ணுதல்” என்றது முதல் "இறந்திசினோளே என்றதுவரை சொல்லியது, அவனுடைய பரத்தை யாவளென்பதும், அவள் அவனுடன் ஊடிச்சினந்து ஒதுக்கிவிட்டநிலை தாங்கள் அறிந்ததே என்பதும் காட்டுவதற்காம். 'எம் மணல்மலி மறுகின் இறந்திசினோள்' என்றது, பரத்தை தம்மேற் பகையுடையாளாய் வந்து கலகம் செய்தனள் என்பதை உரைத்ததாம். கமழ்தார் பரீஇயனள்’ என்பதற்கு, அவள் அவன் தனக்களித்த மலர் மாலையினை அறுத்தெறிந்தனள் என்றலும் பொருந்தும்.

'இதுவோ மற்று நின் செம்மல்?’ என்றது, அவனுடைய குடியுயர்வைச் சுட்டி, அவனுடைய ஒழுக்கத் தாழ்ச்சியை இழித்துப் பழித்துரை கூறியதாம்.

307. பிரிதல் பொருந்துமோ?

பாடியவர் : மதுரை ஈழத்துப் பூதன் தேவனார். திணை : பாலை. துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது.

(தான் பிரிந்து போகவிருக்கின்ற செய்தியைத் தோழிக்கு அறிவிக்கிறான் ஒரு தலைவன். அத் தலைவனுக்கு, அவள் அதனால் தலைவிக்கு வந்துறுகின்ற ஏதத்தின் மிகுதியினைச் சொல்லிப் பிரிந்துபோகும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதாக அமைந்த செய்யுள் இது)

          'சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
          அகலெழில் அல்குல் அல்வரி வாடப்
          பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்
          பெயல்உறு மலரின் கண்பனி வார
          ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து 5