பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 35


செலுத்தலில் வல்லபாகன். 10. வாய்ச்செல - தாவிச் செல்ல; வழிகொண்டு செல்லவும் ஆம் 12. பையுள் வருத்தம். பிறப்ப ஏழ: மறப்ப எனவும் பாடம்; யாழ், செவ்வழிப் பண்ணையும் மறப்ப என்று பொருள் கொள்க. 15. கடவுட் கற்பு - தெய்வக் கற்பு, மடவோள் - இளையோள். 16 செய்வினை - செயத்தகு வினை; அவை விருந்து புறந்தருதல் முதலியவான இல்லறக் கடமைகள். 18. கண்ணி - தலைமாலை. 20 பெருந்தார் - பெரிதான தார்; பொருந்திதழ் எனவும் பாடம். ஒலிகதுப்பு - தழைத்த கூந்தல். 21. நகை - ஒளியுமாம்; அது கணவன் வந்துறக் கண்ட பூரிப்பினாலே வந்தடைந்தது. கவவ-இறுகத் தழுவ,

விளக்கம்: மறியுடை மடப்பிணை தழிஇப் புறவின் திரிமருப்பு இரலை பைம்பயிர் உகழ’ என்றது, தலைவியும் அக்காலத்தில் அங்ஙனந் தானும் தன் காதலனுடனே கூடித் தழுவி இன்புற மாட்டோமாவென ஏங்கிய தன்மையினைப் புலப்படுத்துவதாம். 'தம்நிலை அவன் கொல்’ என்றது, 'அவர் வாராராயின் தான் அழிந்துபடக் காண நேரும் அவர் நிலை தான் யாதாகுமோ? என்றதாம்.

மேற்கோள்: தொல்காப்பியக் கற்பியலின், 'பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த என்னும் சூத்திர உரையுள், இச்செய்யுளைக் காட்டி, இது, 'தோழி முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அதுகண்டு தான் கலங்கிய வாறும் தலைவற்குக் கூறியது' என்பர் நச்சினார்க்கினியர்.

315. சேக்குவள் கொல்லோ?

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய தாய் சொல்லியது சிறப்பு: பெரும்பெயர் வழுதியின் கூடற் பெருநகரத்துக் காவற்சிறப்பு.

(தலைவி ஒருத்தி, இற்செறிப்பின் காரணமாகத் தன் தலைவனைக் காணாது வருந்தியவள், முடிவில், தான் காதலித்த அவனுடனேயே உடன்போக்கில் தன்னில்லத்தைவிட்டு அகன்று போய்விட்டனள். அதுகாலைத் தன் மகள்போகியதனால் வருத்தமுற்றுப் புலம்புவாளான தாய், இவ்வாறு தன் நெஞ்சுக்குச் சொல்லுகின்றனள்.)

          கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
          சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
          பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
          கண்துணை ஆகநோக்கி நெருநையும்
          அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும் 5