பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அகநானூறு - நித்திலக் கோவை



          அறியா மையிற் செறியேன் யானே
          பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
          அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
          சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
          புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக் 1O

          கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
          அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
          வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
          கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
          சேக்குவள் கொல்லோ தானே தேக்கின் 15

          அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
          ஊன்புழுக்கு அயரும் முன்றில்
          கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே.

"இவளது தலைமயிரும் குறுகியதான நெறிப்பினைத் தம்மிடத்தே கொண்டன. இவளது முலைகளும் தம் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தின் புடைப்பினாலே சிமிழுடன் மாறுபட்ட வாயின. இவள், அதனாற் பெண்மை’ எனும் தன்மையினைக் கொண்டுவிட்டனள். இங்ஙனமெல்லாம் என் கண்களே துணையாகக்கொண்டு பலமுறை பார்த்துப் பார்த்து என் நெஞ்சம் நேற்றுங்கூட ஐயுற்றதே? அங்ஙனம் ஐயுற்றதன் பின்னரும். என் அறியாமையின் காரணமாக, இவளை இற்செறித்துக் காவாது போயினனே?

“பெரிதான புகழினையுடைய பாண்டியனது கூடல் நகரினைப்போன்ற, தன்னுடைய அரிய காவலைப் பொருந்திய பெரிய மனையிடத்தே, சிலம்புகழி நோன்பும் செய்யப் பெற்றனளில்லையே? நெடுந்தொலைவும் அடையச் சென்றனளே? நீர் வறட்சியுற்றுக் கிடக்கும் சுனைகளைக் கண்டு தளர்ச்சியுற்று, புறவானது துளைத்து உண்ட புல்லிய நெல்லியினது, கோடைக் காற்று உதிர்த்த குவிந்த இடத்தையுடைய பசிய காய்கள், நூலற்று உதிர்ந்து கிடக்கும் துளைகளையுடைய பளிங்குக் கற்களைப் போன்று வறிய நிலத்தே உதிர்ந்திருக்கும் காட்டுவழியில் கூர்மையான வேலினையுடைய அவ்விளை யோன் பொய்ம்மை அழைக்கக், கதுமென அவனுடன் போகவும் செய்தனளே?

"புதரினைப் போன்றதான குடிசையின் முற்றத்திலே, தேக்கின் அகன்ற இலையிலே குவிக்கப்பெற்ற, புழுக்கிய ஊனினை உண்ணும் காட்டிற் பொருந்திய வாழ்வினை உடைய வரது சிற்றுார்க்கண்ணே, அவள் இப்போது தங்கியும் இருப்பாளோ?”