பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 39


சுருங்கிப்போன தம் முலையினைச் சுவைத்து வருந்த வாழ்ந்திருத்தலை அறிந்திருந்தும், அதனை மேற்கொள்பவர் அறிவற்றவரே யாவரன்றோ!

சொற்பொருள்: 1. துறை - நீர்த்துறை. வழங்கும் - இயங்கும் 2. அரிமலர் - விளங்கும் மலர்; செவ்வரிபெற்ற மலரும் ஆம். நெறிமருப்பு - நெறித்தலைக்கொண்ட கொம்பு 3. சுவல் - முதுகு. போத்து - கடா. 4. அள்ளல் - அளல் என வழங்கும் சேற்றுப்பள்ளம். 5. குறைய - அழிந்துபட 6. குரு உக்கொடி - நிறமமைந்த கொடி; பரூஉக்கொடி எனவும் பாடம் 8. தேர் தர தேர்ப்பாகன் தேரேற்றிக் கொண்டு தர தெரியிழை நெகிழ்தோள் ஆய்த்தணிந்த அணிகள் நெகிழ்ந்துபோக விளங்கும் தோள்கள். 9. ஊர்கொள் - ஊர் கொள்ளலான ஒழுக்கமரபு 10. தாங்கலோ இலன் - பொறுத்தலோ இலன்; கைவிடுதல் அற்றவனாக உள்ளவன். 13. சிலபதம் - சிறிதளவான உணவு. 14. தாமட்டுண்டு தமியராகி - தாமே சமைத்து உண்டு தனித்தோராகி; இது அவனால் அவர் ஒதுக்கிவைக்கப் பெறும் வாழாவெட்டியராகிய வாழ்வைக் குறிப்பது 17. உடலுதல் - மாறுபாடு கொள்ளுதல்.

விளக்கம்: 'ஊர் கொள் கல்லா' என்பது, 'ஊரே இடமில்லையாகும்படி ஆரவாரித்து வருகின்ற அறியாமை செறிந்த பரத்தையர் எனவும் சுட்டும். 'தாங்கலோவிலன்? என்றது, பரத்தையர் மிகுதியாக வந்துவந்து போதலினால், அவன் அவரைத் திருப்திசெய்விக்க ஆற்றானாகிய நிலையில் தளர்வுற்றுத், தானே, அதனைத் தாங்கமாட்டாத தன்மையனாயினான் என்றும் பொருள் தருவதாம்.

உள்ளுறை: “முது எருமைப் போத்து, பொய்கை ஆம்பல் மேய்ந்து, அள்ளல் துஞ்சிப், பொழுதுபட, வரால் குறையப் பகன்றை சூடி மூதூர்க்கண் போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்” என்றனர். இது, தலைவன் பரத்தையர் சேரியிடத்தே பரத்தையரை நுகர்ந்து, இரவெல்லாம் அங்கேயே மயங்கிக் கிடந்து, காலையில் அவ்விடத்தே பெற்ற அடையாளங்களுடன் வீடுநோக்கி வெட்கமின்றி வருவதைக் குறித்துப் பழித்ததாம். ஆம்பல் பரத்தையர்க்கும், மிகுசேற்று அள்ளல் அங்குப் பெற்ற இழிந்த இன்பத்திற்கும், பகன்றை சூடிவரல் அவன் மேனியில் விளங்கும் பரத்தமையால் விளங்கிய குறிகட்கும், முதுபோத்து அவனுக்குமாகப் பொருத்திக் காண்க. 'துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கையிடத்து அரிமலர் ஆம்பல் மேய்ந்த கடாப்போல, அவனும் பலர் உலவும் பரத்தையர் சேரிக்கண் அழகுடையாளாகிய ஒருத்தியின் இன்பத்தை நயந்து பெற்று உண்டனன்’ என்க. 'பைந்தின வரால் குறைய' என்றது,