பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அகநானூறு -நித்திலக் கோவை


செறிந்த காட்டிடத்தே வழிதப்பிப் பிரிந்த நின் வேட்டுவரோடு நாய்களையும் அழைக்கின்ற குறிப்பாகிய தன்மையினைக் கொண்ட, நின் ஊதுகொம்பினை எடுத்துச் சிறிதே ஊதுதலும் வேண்டுகின்றேன்.

சொற்பொருள்: 1. மானதர் - விலங்கினம் வழங்குகிற சிறு பாதை, 4. சிறு நெறி - சிறு வழி; குறுகலான நெறி. இரவுச் சிறு நெறி என்பது, இர வழங்கு சிறுநெறி எனவும் பாடபேதத்துடன் வழங்கும். 7. விறல் - வெற்றி மலையின் வெற்றி என்றது அம் மலைவாழ்நரின் வெற்றிச் செவ்வியை உரைத்ததாம். 8. மன்றல் - மணம், 9. இன்று தலையாக - இன்று முதலாக,10. ஏம் உறு- மயக்க முறுவித்தலான; அதாவது மிகுதியான துயரம் என்க. 13 வேட்டு - வேட்டுவர். 14. அழுவம் - அடர்ந்த காடு. 15. கோடு - ஊது கொம்பு.

விளக்கம்: "வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம் முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும், பழவிறல் நனந் தலைப் பயமலை நாட” என்றது, அத்தகையோனாகிய சிறப்புடைய அவன் வரைந்து வரின் தம்மவரும் மாறாது இசைவர் எனக் குறித்ததாம். அதனை மேலும் விளக்கமுறக்கூறுபவள், "மன்றல் வேண்டினும் பெறுகுவை” என்றனள்.

'இன்று தலையாக வாரல்’ என்றவள், வந்தால், 'நின் கோடே ஊதல் வேண்டுமால்' என வேண்டுகின்றனள். ‘ஏமுறு துயரம் யாமிவண் ஒழிய' என் அவளுரைத்தாலும், அதனால் இவர்களின் களவு ஊரறிந்ததாகி அலர் பெருகக் தெளிவாகும். எனவே, அவன் மனம் வரைந்துகோடலிலேயே முற்றமும் செல்லும் என்பதும் பெற்றனள்.

மேற்கோள்: தொல்காப்பியக் களவியலுள், 'நாற்றமும் தோற்றமும்’ என்ற சூத்திரத்து, ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்’ என்னும் பகுதிக்கண், இச் செய்யுளைக் காட்டி, இதனுள், 'வரினே ஏமுறு துயரம் நாமிவண் ஒழிய நின் நாய் பயிர் குறிநிலை கொண்ட கோட்டை ஊதல் வேண்டு மாற் சிறிது’ என வருவது, ஆற்றிடை ஏதமின்றிச் சென்றமை தோன்ற ஆண்டோர் குறிசெய்’ எனக் கூறுவனவும் கொள்க’ என்பர் நச்சினார்க்கினியர்.

319. எய்துக உமக்கே!

பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். திணை: பாலை, துறை: செலவுணர்த்திய தலைமகற்குத் தோழி செலவழுங்கச் சொல்லியது.{{nop}]