பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அகநானூறு - நித்திலக் கோவை


தெற்றுஆ குதல்நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்குவளை நெகிழப் பரந்துபடர் அலைப்பயாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு 10

அடக்குவம் மன்னோ - தோழி மடப்பிடி
மழைதவழ் சிலம்பிற் கடுஞ்சூல் ஈன்று
கழைதின் யாக்கை விழைகளிறு தைவர
வாழையஞ் சிலம்பிற் றுஞ்சும்
சாரல் நாடன் சாயல் சாரல் 15

தோழீ!

சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கும் மலைச்சாரலிலே, மேகங்கள் வலமாக எழுந்து கூத்தரின் முழவுகள் அதிர்ந்தாற் போலும் முழக்கத்தையுடைய இடியேறுகளுடன் பொறுந்திய வாய் மிக்க மழையினைப் பொழிந்த, நள்ளென்னும் ஒலியினைக் கொண்ட இரவின் நடுயாமத்தே-

பாம்பினது பசிய தலையிலே இடறிக்கொண்டும், அப்பாதி இரவிலே தவறாமல் வந்து எம் முலைகளிடையே தழுவிக் கிடந்தும், தம் வருத்தமெல்லாம் நீங்குமாறு நம்மை அணைத்தவராய், இரவெல்லாம் இனிதாகப் பொருந்தியிருந்த தம் உறவினை, விளங்கும் நம் வளைகள் நெகிழ்ந்து போகவும், துன்பம் பரவி நம்மை வருத்தவுமாக, அவர் வெறுத்தல் தெளிவுடையதாதலை நாம் நன்கு அறிந்திருந்தோமானால்-

இளைய பிடியானையானது, மேகங்கள் தவழுகின்ற மலையிடத்தே, தன் முதற்கன்றினை ஈன்றதாகி, மூங்கிலைத் தின்று கொண்டிருக்கும் உடலினைக் கொண்டதும், தன்னிடத்தே விருப்பத்தை உடையதுமான களிறானது தடவிக் கொண்டிருக்க, வாழைகளையுடைய அப் பக்கமலையினிடத்தே கிடந்து உறங்கிக்கொண்டிருக்கும், அத்தகைய சாரல்களையுடைய நாட்டிற்குரிய நம் தலைவனின் அழகிதான மார்பினை-

அன்று, அவர் நம்மைத் தழுவுந்தோறும் தழுவுந்தோறும், வருந்த முகந்து கொண்டவராய், அவரை எம் மார்பிடத்தேயே அடக்கிக்கொண்டிருப்போமே? அதுவும் இதுகாலை இயலாமற் கழிந்ததே!

சொற்பொருள்: 1. வாழை சுரபுன்னை, அமல் - நிறைதலையுடைய வயிரியர் - கூத்தர் 2. ஏறு இடியேறு. 3. உரவுப்பெயல் - மிக்க பெயல்; அடைமழை, பைந்தலை - பசிய தலை, படத்தையுடைய தலையும் ஆம். 5. இடைமுலை முயங்கி முலையிைடை முயங்கி எனக் கூட்டிப் பொருள் கொள்க. 6. துனி - வருத்தம்.