பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அகநானூறு - நித்திலக் கோவை


கழிப்பூக் குற்றுங் கானல் அல்கியும்
வண்டற் பாவை வரிமணல் அயர்ந்தும்
இன்புறப் புணர்ந்தும் இளிவரப் பணிந்தும்
தன்றுயர் வெளிப்படத் தவறில் நம்துயர்
அறியா மையின் அயர்ந்த நெஞ்சமொடு 5

செல்லும் அன்னோ மெல்லம் புலம்பன்!
செல்வோன் பெயர்புறத்து இரங்கி முன்னின்று
தகைஇய சென்றவென் நிறைவில் நெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே?
எய்தியும் காமஞ் செப்ப நாணின்று கொல்லோ 10

உதுவ காணவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண்மணற் குவவுமிசை யானும்
எக்கர்த் தாழை மடல்வயி னானும்
ஆய்தொடிப் பாசடும்பு அரிய ஊர்பிழிபு
சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த 15

கடுஞ்செலற் கொடுந்திமில் போல
நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே!

தோழி! மென்னிலமாகிய நெய்தலை உடையவன் நம் தலைவன். அவன்-

கழியிலுள்ள பூக்களைப் பறித்துத் தந்தும், கானற் சோலையிலே சேர்ந்திருந்தும்,வரிப்பட்டமணலிடத்தே வண்டற் பாவை சமைத்து விளையாடியும், நாம் இன்புறப் பலகாலும் நம்முடன் கூடியிருந்தும், சிறுமை தோன்ற நம்மைப்பணிந்து நின்றும், குற்றமற்ற நம் துயரினை அறியாமையினாலே, தான் தளர்வுற்ற நெஞ்சமுடையவனாகித், தன் துயரம் வெளிப்பட்டுத் தோன்றுமாறு காட்டி, மீண்டும் செல்லுகின்றான். அந்தோ!

அங்ஙனம் செல்பவன் செல்லும் திசையிலேயே, அவன் பால் இரக்கம் உடையதாகி, அவனுக்கு முற்படச்சென்று நின்று? அவனைப் போகாது தடைசெய்யச் சென்ற என் நிறையற்ற நெஞ்சமானது, அவனிடத்தே சென்றடைய வில்லையோ? அன்றி, அடைந்தும் நம் காமத்தினை அவன் பால் எடுத்துச் சொல்லுதற்கு நாணி நின்றுவிட்டதோ?

அவன் ஏறிச் சென்ற தேரும் அங்கே தோன்றுதலைக் காண்பாயாக, திரண்ட வெண்மணற் குவியல்களில் மேலும், மணல் மேட்டிடைத் தோன்றும் தாழை மடல்களிடத்தும், படர்ந்துள்ள அழகிய கொடிகளையுடைய பசுமையான அடுப்பங் கொடிகள் அரிபடுமாறு ஏறியும் இறங்கியும் அது