பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 69


செல்லுகின்றது. சிறுகுடி வாழ்வினரான பரதவர் மாக்கள், பெரிதான கடலிலே செலுத்திய கடிதாகச் செல்லுதலையுடைய வளைவான மீன்பிடி படகினைப்போல, உயர்ந்து மறையும் தோற்றத்துடனே, அது தொலைவிற் சென்று மறைவதனையும் காண்பாயாக.

சொற்பொருள்: 1. கழி - உப்பங்கழி. குற்றுதல் - பறித்தல். கானல் - கடற்கரைச் சோலை. அல்குதல் - தங்கியிருத்தல். 3. இளிவர - எளிமை தோன்ற, 7 பெயர் புறத்து - செல்லும் திசைக்கண் 13, எக்கர் மணல்மேடு, 16 திமில் மீன்பிடி படகு 17. நிவந்து படுதல் - உயர்ந்தும் தாழ்ந்தும் தோன்றுதல்

விளக்கம்: அவனைப்போலவே தலைவியும் அவன்பாற் காதல் கொண்டிருத்தலை அவன் அறியாதானாகிப் போன தன்மையினைத் தலைவிக்கு இப்படித் தோழி எடுத்து உரைக்கின்றாள். தான் அதனை அறிந்த நிலையினையும் புலப்படுத்துகின்றான். அவன் கொண்ட துயரம் அவனுடைய அறியாமையின் காரணத்தாலே வந்து அமைந்ததே என்று கூறும் நயத்தினை அறிந்து இன்புறுக. தேர் படிப்படியே சென்று மறைதலையும், அது மணற்குவியல்கள் மீதும் அடும்பங் கொடிகள் மீதும் தாழை மடல்கள்மீதும் ஏறியும் இறங்கியும் செல்வதனையும், கடலிடையே அலைகளிடத்தே செல்லும் படகு உயர்ந்தும் தாழ்ந்தும் சென்று கண்ணுக்குச் சிறிது சிறிதாகி மறைதலையும் சிறப்புடன் உவமித்துக் கூறினள். தலைவியின் மனம் அவன் பின்னே செல்வதனையும், ஆயின் நாணத்தால் அவள் தன்விருப்பத்தைத் தோன்றக் கூறாத நிலையினையும், 'நெஞ்சம் எய்தின்று கொல்லோ தானே, எய்தியும் காமஞ் செப்ப நாணின்று கொல்லோ என உரைக்கும் நயத்தினை அறிந்து இன்புறுக. இங்ஙனமாகத் தலைவனுக்கு இசையுமாறு தலைவியைத் தோழி வயப்படுத்துவாளாகக் கூறினாளும் ஆகும்.

மேற்கோள்: அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு” என்பது, தன்வயின் உரிமை இகந்துமாயும் என்பது, அவன்வயிற் பரத்தைமை என, இச் செய்யுட்பகுதிகளை, "மறைந்தவற் காண்டல் என்னும்தொல்காப்பியக் களவியற் சூத்திர உரையிற் காட்டிக் கூறுவர் நச்சினார்க்கினியர். இவர் கருத்தின்படி இச்செய்யுள் தலைவி கூற்றாக அமையும்.

331. சென்றவர் அன்பிலாதவர்!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: திதியன் என்பானின் வாளாற்றல்.