பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 71


கத்தே வீற்றிருப்பவன், கள்ளின் மகிழ்வினை உடையவனா யிருக்கும் திதியன், அவன் வேளிரோடு, போரிடுதலின் பொருட் டாகத் தன் உறையினின்றும் கழித்த வாளின் வாயினைப்போன்ற கொடுமையுடையதான வறண்ட சுரநெறியினைக் கடந்து சென்றனர் அவர்.

அங்ஙனம் சென்ற அவர், நம்பால் அன்பற்றவரேயாவர். (ஆதலின்) இனி யாது செய்வோமோ?

சொற்பொருள்: 1. அரைய - அடிமரத்தை உடைய 2 கோடு - கொம்பு இங்கே யானைத் தந்தத்தைக் குறித்தது. கொள்ளை மிகுதியான வான்பூ - வெண்மையான பூக்கள். 4. சேடு கூட்டம். 5. பழையர் - குன்றவர். 6. அமை - மூங்கில். கடிப்பு - குழாய். 7.மறுகும். சுற்றித் திரியும்,12.நனை-கள் 13.பொரீஇய-போரிடற் பொருட்டாக,14. வறுஞ்சுரம் வறண்டசுரம் அருஞ்சுரம் எனவும் பாடம்.

விளக்கம்: "ஈன்ற கரடிக்கூட்டங்கள் தின்று மிஞ்சிய இருப்பைப் பூக்களைக் குன்றவர் மகளிர் தெருவிற் சுழன்று திரிந்து விலைகூறும் நாடு பல பிறக்கொழிய' என்றது.அது கண்டும் தன்பால் அன்புஎழப் பெற்றானில்லையே என வருந்தியதாம். நாளவை இருந்த திதியன் கழித்த வாள்வாய்' என்றது. அவ்வாறே அன்பு காட்டிய தலைவன் இன்று கொடிய தன்மையினைக் கொண்டனன் என்றதாம்.

332. தலைநாள் போலும்!

பாடியவர்: கபிலர் திணை: குறிஞ்சி, துறை: இரவுக்குறிக் கண் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.

(இரவுக் குறியிடத்தே தலைவனுடன் தலைவி சந்தித்துக் களவாகக்கூடி மகிழ்ந்துவருகின்ற காலத்தே ஒருநாள் அவன் வந்து ஒருபக்கமாக ஒதுங்கியிருக்கவும், அவள் தன் தோழியிடத்தே தான் அவனிடத்துக் கொண்ட காதலை உரைப்பாள் போலச் சொல்லுகின்றாள். இதனைக் கேட்கும் அவன். 'விரைவிலேயே தலைவியை மணந்து அவளுடன் பிரிவற்ற இன்பவாழ்விலே திளைப்பதனை நாடுவான்' என்பது அவளுடைய நோக்கமாகும். இது துறைப்பட அமைந்தது இச் செய்யுள்)

முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்
கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை
நீர்நசை மருங்கின் நிறம்பார்த்து ஒடுங்கிய