பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அகநானூறு - நித்திலக் கோவை


பொருமுரண் உழுவை தொலைச்சிக் கூர்நுனைக்
குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅக் 5

கன்முகை அடுக்கத்து மென்மெல இயலிச்
செறுபகை வாட்டிய செம்மலொடு அறுகால்
யாழிசைப் பறவைஇமிரப் பிடிபுணர்ந்து
வாழையம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின்புரைத் தக்க சாயலன் எனநீ 10

அன்புரைத் தடங்கக் கூறிய இன்சொல்
வாய்த்தன - வாழி, தோழி!-வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமும்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே! 15

நிறம் விளங்கிய களிறானது, தன் இனத்துடன் கூடியதாக, முளைகள் வளர்ந்திருக்கும் தூறுகளிலேயுள்ள மூங்கில்களை ஒடித்துத் தின்றபின், நீர் வேட்கையுடையதாய்த் துறையிடத்தே செல்லும் அவ்விடத்தே, தன் உருவினைப் பார்த்துத் தன்னைத் தாக்குவதன் பொருட்டாகப் பதுங்கிய, போரிடும் மாறு பாட்டைக்கொண்ட புலியினைப் பொருது, அது கொல்லும். கொன்றபின், கூர்மையான முனையிலே குருதித்தோய்ந்து செந்நிறமாயுள்ள தன் கொம்பினை, மிக்க மழையிலே கழுவிக் கொண்டதாகக், கல்முனைகளையுடைய மலைச்சாரலிடத்தே மெல்லமெல்லச் செல்லும், கொற்றங்கொண்டதன் பகையினைக் கொன்றழித்த ஆண்மையுடனே மதங்கொண்டதாகி, அம் மதநீரிடத்தே யாழொலிபோல இசைக்கும் அறுகாற் பறவையான வண்டினம் மொய்த்து ஆரவாரிக்கச் சென்று, அது, தன் பிடியுடனே கூடி இன்புறும். அங்ஙனம் இன்புற்றதாக, அது வாழை மரங்களையுடைய மலையிடத்தே உறங்கியிருக்கும். அத்தகைய நாட்டிற்கு உரியவன் நம் தலைவனாவான்.

'அவன் நின்னுடைய உயர்விற்குத் தகுதியான தன்மையன் என, நீ அன்பினாலே உரைத்து; உன் உள்ளம் அமைதி கொள்ளும்படியாகக் கூறிய இனிதான சொற்கள் எல்லாம், இந்நாள் வாய்மையே ஆயின, விரும்பியவருக்கு அமுதத்தைப் போன்றதாக விளங்கும் இனிய மணங்கமழுகின்ற தாரினையுடைய அவன் மார்பிடத்தே, வண்டும் இடையிலே பொருந்தாத செறிவுற்ற முயக்கமும், அவன்பேரிற் கொண்ட நீங்காத காதலும், முதலில் அவனோடு கூடிய அத் தலைநாளினைப் போன்றே என்றும் சிறவா நின்றன. தோழி! நீ வாழ்வாயாக!