பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 75


தருதலையும் நீ விரும்புகின்றனை! அவ்விடத்தே நின்னுடைய துன்பத்தின் மிகுதியைச் சென்று எவரேனும் அவருக்கு உரைப்பின், அச்சொற்களைக் கேட்டு அவரால் தாங்கி யிருத்தலும், இயலுமோ? செய்யப்படும் பொருள் முற்றுப் பெறாதேயாயினும். இன்பப் பயன் அழியுமாறு, அப்பொருளையே மேலாகக்கொண்டு, அவர் அங்கே தாழ்த்துவிடுபவரும் அல்லர் காண்!

வேனிற் காலத்திலே, கோடைக் காற்றினாலே குருத்து இற்று உதிர்ந்துபோயின வருத்தத்தினைச் சொல்லமாட்டாதாய்த், துளையினையுடைய வெண்மையான தலைப்பக்கம் கூம்பு தலுற்று வற்றிப்போயிருக்கும் இளம் பனையினைப்போலத், தம் கைகளை உயர்த்து எடுத்தனவாக, யானைகளின் பெருங்கூட்டம் மேகத்தை நோக்கிக் கதறிக்கொண்டிருக்கின்ற மலைப்பகுதி யினையும் கடந்து, தொலைவாகச் சென்றவர் நம் காதலர் எனும், தாம் சொல்லிச்சென்ற நாளின் எல்லை கடந்து நாட்கள் இடைப்பட்டுப்போகாமல், நம்மவரான அவர் வந்து சேர்பவரும் ஆவர்.

இவ்வாறெல்லாம் பயனை விளக்கும் கொள்கையுடையையாகி, இனிமை திரியாது சொல்லுகின்ற நின்னுடையவாயின் இனிதான மொழிகள், நல்ல உண்மையாகவே ஆகுக. நீ கூறியபடியே அவர் வருவாராயின் அதுவும் நல்லதேயாகும். அல்லாமல்-

வாராதவராக, எம் காதலர், அவர் சென்றிருக்கும் அவ்விடத்தவரேயாயினும், அவர் சென்றுள்ள நாட்டிடத்தே செய்தற்கு மேற்கொண்ட செயலினை முடித்துக் கொண்டவராகி, மீண்டு வருவதற்கான உள்ளத்தையும் உடையவர் என்றாலும் அங்ஙணம் வந்தடைதல் விரைவில் வந்தடையும் என்னும் பெரிதான விருப்பத்துடனே, அவரிடமிருந்து தூதாவது வரப்பெற்றனமாயின், இவ்விடத்து நம் பசலை மறைந்தொழிதலும் எளிதாகுமே!

சொற்பொருள்: 1. யாஅ - யாமரம். விதிர்த்தன்ன - சிதறினாற்போன்ற 4 தலைத்தருதல் - கொண்டுவிடல் 6 எவ்வம் - துன்பம். 7 வயங்குதல் - முற்றுதல் பயன் இன்பப் பயன். 8. கோடை - கோடைக்காற்று; மேற்காற்று 10. தூம்பு - தொளை. திரங்கிய - வற்றிய, 12. வானம் - மேகம். 16. நம்வாய்ஆக - நல்ல உண்மையே ஆகுக 21. மறுதரல் - மீண்டுவரல் 22 குறுகுதல் - மீண்டுவந்து சேர்தல்.