பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அகநானூறு -நித்திலக் கோவை


போராற்றலையுடைய செழியன், அவனுக்கு உரியது மாடங்கள் பொருந்திய மூதூரான மதுரைப் பேரூர். அப்பேரூரின் மதிற்புறத்தினைத் தழுவியவாக, நெடிதான வெயிலினிடத்தே வாட்டமுற்றவையாக, குறுகலான இறைகளையும் திறண்ட அடியினையும் உடையவான கமுகமரங்கள் விளங்கும். தொடுத்தல் அமைந்த பல மலர்களின் இதழ்களைப் பொதிந்து கட்டியமைத்த குடையினைப்போன்று விளங்கும், காய்த்தலைப் பொருந்திய அம்மரங்களின் எருத்துக்கள். அவ்வெருத்துக்களிடத்துப் பாளையும் தம் பிடிப்பு நீங்கிக் கழித்துபோக, வாளை வடித்துவைத்தாற் போலத் தோன்றும் வயிற்றினையுடைய பொதிகள் தோன்றும். அப்பொதிகளிடத்தே, பருவம் அடைந்தவிடத்துத் தோன்றிய விருப்பம் வருதலையுடைய அழகினைக்கொண்ட ஆரத்தைப் போன்று அழகுடன் விளங்கும் புதுப்பூக்கள் காணப்படும்.நீட்சி பொருந்திய கவரியினைப்போல, வண்டுகள் தேனுண்ணும்படியாக, அப்பூக்கள் இதழ் விரிதலையும்பெறும், முத்துக்களைப்போலும் வெண்மை யுடைய அப்பூக்கள் பரந்து, பல கறையினைப் போன்ற ஒள்ளிய நிறத்தையுட்ைய ஆலங்கட்டியைப்போல, மகிழ்ச்சியை மிகுதியும் உண்டாக்குகின்ற சிறப்புடன் அழகுமிகுந்து தோன்றும். அப்பூவொடு வளர்ந்த முதிராத இளங்காயினது நீரினுங் காட்டில் இனிமை உடையதாகிக், கூரிய பற்களிடையே அமுதம் ஊறுகின்ற சிவந்த வாயினை உடையவள் நம் தலைவி. ஒளிபொருந்திய வளைகளை உடைய, அந்த இளமை உடையவளையும் நம்முடன் அழைத்துக்கொண்டு நாம் சென்றோமானால்-?

களிற்றியானையானது சினம் மிகுதியுடையதாகித், தன்னுடைய கொல்லும் வன்மையுடைய கொம்பும் ஒடியுமாறு, பட்ட கிளைகளையுடைய யாமரத்தினைக் குத்தி அதன் பட்டையைக் கிழித்து, கொடுமையான வேனிற்காலத்தே தன் இனிய துணையான பிடியானது உண்ணும்படியாக ஊட்டிக் கொண்டிருக்கும். அங்ஙணம் வருத்தம் குடிகொண்டிருக்கும், நிலமும் பிளந்துபோய்க் கிடக்கும், வெம்மையினையுடைய சுரநெறியும் நமக்குக் கடத்தற்கு அரிதானது அல்லாததாகும்.

சொற்பொருள்: 1. இருள்படு நெஞ்சம் - மயக்கத்தால் இருண்டுபோயுள்ள நெஞ்சம்; இது வறுமைத் துயரத்தால் நேர்ந்தது. 5. கொன்மருப்பு - கொலை செய்யும் வலிமையுடைய கொம்பு. 6. இன்னா வேனில் - வருத்தத்தையுடைய வேனில். இன்துணை - இனிதான துணை; அது அதன் பிடியானையாகும் 7. மராஅத்து - மராமரத்து. 'யாஅத்து எனவும் பாடம் பொளி'