பக்கம்:அகமும் புறமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 • அகமும் புறமும்

நகைச்சுவை தோன்றப் பேசிய இடங்களும், மேலை நாட்டார் ‘ஹ்யூமர்’ தோன்றுகிறது என்று கூறும் இடங்களும் வெவ்வேறானவை. இயற்கையில் தோன்றும் நகைச்சுவை ஒருவருடைய பேச்சின் மூலமும் செயலின் மூலமும் பிறரால் அனுபவிக்கப் பெறுகிறது. ஆனால், ஒவ்வொரு நாட்டினரின் பேச்சும் செயலும் பிற நாட்டினருடைய சொல் செயல்களிலும் மாறுபட்டவை அல்லவா? எனவே, நாம் நகை தோன்றப் பேசும்பொழுது பிறநாட்டாருக்கு அங்கே அச்சுவை தோன்றுவதில்லை. அப்பிறநாட்டார் நம்மொழியை நன்கு கற்றிருப்பினுங்கூட, நகைச்சுவை தோன்றும் இடங்களை அவர் காண்டல் இயலாது. நமது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே இம்மொழியில் தோன்றும் நகைச்சுவையை நன்கு அனுபவித்தல் கூடும். ஆங்கிலப்படக் காட்சிகள் பார்க்கும்பொழுது இந்த அனுபவம் ஏற்படுதலைக் காணலாம். பேசிக் கொள்பவர்கள் விழுந்துவிழுந்து சிரிப்பார்கள்; ஆனால், அதனைக் கேட்கும் நமக்கு அந்த பேச்சு முற்றிலும் விளங்கினாலுங்கூட ஏன் சிரிக்கிறார்கள் என்பது பல சமயங்களில் விளங்குவதில்லை!

எனவே, மேலை நாட்டார் கூறும் ‘ஹ்யூமரை’ அப்படியே தமிழில் ‘நகைச்சுவை’ என்று கூறிவிட்டதாக யாரும் நினைந்துவிட வேண்டா. பிறரைப் புண்படுத்தாத முறையில் அமையவேண்டிய நகைச்சுவை, பிறரிடம் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் பொழுது கூட, அவர்களும் சேர்ந்து நகைக்குமாறு அமைய வேண்டுமே தவிர, அவர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது. தம்பால் உள்ள குறைகளைத்தாம் எடுத்துக் காட்டுகின்றனர் என்று அறிந்தவிடத்தும் குறையுடையார் வருந்தாமல் ஏற்றுக் கொள்ளும் முறையில் அமைவதுதான் சிறந்த நகைச்சுவை எனப்படும். நகைச்சுவை தோன்றப் பேசும் வன்மை சிலரிடம் காணப்படும்; ஆனால், இவ்வாறு பேசுவதால் யாதொரு பயனையும் அவர்கள் எதிர்ப்-