பக்கம்:அகமும் புறமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 101

பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் பேச்சைக் கேட்பவர்கள் கைகொட்டிச் சிரித்து ஆர்ப்பரிப்பதைத் தவிர வேறு பயனைப் பேசுபவரும் கேட்பவரும் எதிர் பார்ப்பதில்லை.

ஆனால், இலக்கியத்தில் நகைச்சுவை தோன்றும் பொழுது இவ்வாறில்லை. நகை தோன்றச் செய்வதுடன் பெரியதொரு பயனையும் கருதியே இலக்கிய ஆசிரியன் நகைச்சுவையைக் கையாள்கிறான். அவன் கருதும் பயன் தனிப்பட்ட ஒரு மனிதனைத் திருத்தவேண்டும் என்பதாகவும் இருக்கலாம். அன்றே, அவன் காலத்தில் காணப்பெற்ற சமுதாயம் முழுவதையும் திருத்தவேண்டும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம். இவையல்லாத மூன்றாவது வகையும் உண்டு. அகப்பாடல்களில் மருதத்திணைப் பாடல்கள் பலவற்றுள்ளும் நகைச்சுவை உண்டு. தலைவனுடைய நாட்டு வளனை விவரிக்கும் முகமாக அவனுடைய குறைபாடுகள் அனைத்தும் பேசப்பெறும். மேலாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை தோன்றினாலும், ஆழ்ந்து நோக்குகையில் தலைவனைத் திருத்தவேண்டும் என்ற ஆவல் அச்சொற்களுள் அடங்கியிருக்கும். எவ்வளவு பெரிய தவற்றையும் நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினால், பிறர் மனம் நோவாமல் எடுத்துக் கூறலாம். நற்றிணையில் வரும் நுண்மையான நகைச்சுவை ஒன்றைக் காணலாம். அது மூன்றாம் வகையைச் சேர்ந்தது.

பல வகையாலும் சிறப்பெய்திய தலைவன் அவன். அவளும் பெரிய இடத்துப் பெண்தான். அவன் கண்ட பெண்களிடமெல்லாம் மனத்தைப் பறிகொடுத்துத் தவிப்பவன் அல்லன்; அவளும் அவ்வாறே. இவ்வாறு இருந்தும், அவ்விருவரும் ஒருவரையொருவர் சந்தித்தவுடன் காதல் கொண்டனர். கண்டதும் காதல் என்று இக்காலத்தார் கூறும் வகையில் அமைந்ததன்று அவர்களுடைய காதல். பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும் ஒன்றுதான் தம்முடைய காதல் என்பதை அவ்விருவரும் நன்கு அறிந்து