பக்கம்:அகமும் புறமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 103

முடியும்? தலைவன்மாட்டுள்ள அன்பு காரணமாகத் தலைவி பொறுத்திருக்கத் துணியலாம். ஆனால், ஊரார் வாய் சும்மா இராதே! சிறு துாற்றல் , பெருமழையானாற் போல ஊரார் பழிச்சொல்லும் மிகுந்துவிட்டதே! இந்நிலையில் இதற்கு ஒரு வழிகாணவேண்டும் என்று முடிவு கட்டினாள் தலைவி.

தலைவி சிறு குழந்தையாய் இருந்தபோது அவளுக்கு மருத்துவம் செய்து வந்தார் ஒரு மருத்துவர். அவளுக்கு மட்டும் என்ன? ஊரார் அனைவரும் நோயுற்றபொழுது அவரிடமே சென்றனர். அவர் எவ்வளவு அறிவும் ஆற்றலும் படைத்தவர்! அவர்,

‘நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’
                                                                        (குறள்–948)

என்ற குறளை நன்கு அறிந்து கடைப்பிடிப்பவர். ஒரே நேரத்தில் இருவர் வயிற்றுவலி என்று கூறிக்கொண்டு வருவர். இருவருக்கும் வயிற்று வலிதானே என்று அவர் ஒரே மருந்தைத் தருவதில்லை. வயிற்று வலியாகிய காரியம் ஒன்றேயாயினும், அதன் காரணம் வெவ்வேறாகலாம் அல்லவா? எனவே, ஒருவருக்கு இனிய மருந்தும், மற்றவருக்குக் கசப்பு மருந்தும் தருவார். கசப்பு மருந்து உண்பவர் தம்முடைய வருத்தத்தைத் தெரிவித்து எவ்வாறாயினும் தமக்கும் இனிப்பு மருந்து தரவேண்டுவார். ஆனால், மருத்துவர் அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்து விடுவார். ‘நோய்க்கு மருந்தே தவிர நாவுக்கு மருந்து அன்று’, என்று கூறிவிடுவார்; இதனால், நடுவு நிலை திரியாத அறவோர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். பல காலம் அவர் இவ்வாறு செய்வதைத் தலைவி கண்டிருந்தாள். இப்பொழுது அவளுக்கு அவருடைய நினைவு தோன்றிற்று. அவர் செயலை எடுத்துக்