பக்கம்:அகமும் புறமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 • அகமும் புறமும்


‘நாடனை அறியலும் அறியேன்!’

தம்முடைய நெஞ்சால் உண்மை என்று அறிந்த ஒன்றை மறைத்துக் கூற முற்படுதல் தவறாக முடியும் என்று கூறினார் வள்ளுவப் பெருந்தகையார். ஆனால், உலக மக்களிள் பெரும்பாலோர் அறிந்தும் அறியாமலும் இக்குற்றத்தைச் செய்துதான் வருகின்றனர். நெஞ்சறிந்தே பல சந்தர்ப்பங்களில் பொய்பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதால் அந்த நேரத்தில் வரும் துன்பத்திலிருந்து விடுபடவே பல சமயங்களில் இவ்வாறு பொய் பேசுகின்றனர். இன்னுஞ் சிலர் பொய் கூற வேண்டிய இன்றியமையாமை இல்லாத பொழுதும் பொய் கூறுகின்றனர். இவர்களே ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள். காரணமில்லாமல் ஏன் பொய் கூறுகின்றனர் என்று ஆராய்ந்தால், ஓர் உண்மை விளங்கும். இவ்வினத்தார் பொய் கூறுதலை ஒரு கலையாக வளர்த்து விட்டனர். கலைப்பித்துப் பிடித்த கலைஞர்களுக்குத் தங்கள் கலையை மட்டும் மறக்க இயலாது; உணவின்றிப் பட்டினியால் வாடுவார்கள்; ஏனைய எத்தகைய கடுந் தண்டனையை வேண்டுமானாலும் அனுபவிப்பார்கள். ஆனால், அவர்கள் விரும்புகிற கரையிலிருந்து அவர்களைப் பிரித்து விட்டால், நீரிலிருந்து தரையில் எடுத்துப் போடப்பட்ட மீன் போல மூச்சுத் திணறுவார்கள். இந்த இலக்கணமும் கலைஞர் அனைவருக்கும் பொதுவானதே. எனவே, பொய் பேசுதலைக் கலை போல வளர்த்தவர்கட்கும் இது உண்மையாகும். அவர்கள் எந்தத் துன்பத்தை வேண்டுமானாலும் அனுபவிக்கத் தயங்க மாட்டார்கள். ஆனால், ஒரு நாள் மட்டும் பொய் கலவாமல் பேசவேண்டும் என்று கட்டுப்பாடு செய்துவிட்டால்—பாவம்—அவர்கள் பாடு பெருந்திண்டாட்டமாய்ப் போய்விடும்! இந்த வியப்பான பிராணிகளிடம் மற்றொரு புதுமையையும் காணலாம். அதுதான் காரணமில்லாமல் இவர்கள் பொய் பேசுவது ஒரு பயனைக் கருதிப் பொய் பேசுபவர்களை