பக்கம்:அகமும் புறமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 109

நாம் மன்னித்துவிடலாம். ஆனால், எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் பொய்யைப் பொய்க்காகவே பேசும் இயல்புடையவர்கள் இவர்கள். ஆதலாலேதான் இவர்களைக் கலைஞர்கள் என்று கூடக் கூறலாம் போலத் தோன்றுகிறது.

ஏனைய கலைகளில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை; இரண்டு தரத்தாரும் ஒத்த மதிப்புடைய கலைஞராய் விடலாம். ஆனால், ‘பொய்க் கலை’யில் மட்டும் நம் சோதரிமார்கள் நம் பக்கத்திற்கூட வர இயலாது. ஆண் மக்களாகிய நம்முடைய இனத்தின் தனி உரிமை இக்கலை. இக்காலத்தில் வாழும் நமக்கும் மட்டும் இதனைக் கூறுவதாக யாரும் நினைத்து மகிழ்ந்துவிட வேண்டா. நம்முடைய முன்னோர்கட்கும் பொருந்தும். அதுவும் ‘காதல்’ விஷயத்தில் இது முற்றிலும் உண்மை. காதல் சம்பந்தமான விஷயங்களில் தலைவன் அஞ்சாது பொய் உரைப்பான். ஆனால் ஒன்று; அந்நாளில் பொய் பேசிய நம் இனத்தவனாகிய தலைவனுக்கும் இன்று வாழும் நமக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு. அவனுடைய பொய்யால் பிறருக்குத் தீமை ஏற்படுவதில்லை. இன்று நாம் கூறும் பொய்களால்.....?

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த தலைவனுடைய பொய் ஒரு புறம் இருக்க, சில சந்தர்பங்களில் பெண்களும் இதனைக் கையாண்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் பொய் கூறுவேண்டிய இன்றியமையாமை ஏற்படுவதும் அந்தச் சமுதாய வாழ்வில் உண்டு. ஓர் ஆண் மகனும் ஒரு பெண் மகளும் சேர்ந்து தாமே களவு வாழ்க்கையில் ஈடுபட்டார்கள். அப்படி இருக்க, ஊரார் அனைவரும் அந்தப் பெண்ணைப் பற்றித்தான் அலர் (பழி) தூற்றினார்கள். அவள்மேல் வந்த பழிக்கு அவனும் சரிபாதி காரணமாவான் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை! அறிந்தாலும் அவனைக் குற்றம் கூறுவதும் இல்லை.