பக்கம்:அகமும் புறமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 • அகமும் புறமும்

எனவே, தம்முடைய களவு வாழ்க்கையைப் பிறர் அறியாமல் மறைத்து ஒழுக வேண்டுமென்று அவன் கவலைப்படவே இல்லை. இவ்வாழ்க்கை வெளிப்பட்டு விடக்கூடாதே என்ற கவலையெல்லாம்—பாவம்—அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தோழிக்குமே உண்டு. இதனால், சில சந்தர்ப்பங்களில் தலைவியும் தோழியும் வேறு வழி இன்றிப் பொய் பேசி உள்ளனர். இலக்கியத்தில் எங்கோ இரண்டொரு பாடல்கள் இத்தகைய காட்சியைச் சித்திரிக்கின்றன.

அத்தலைவனிடம் சில காலமாக அத்தலைவி களவில் ஈடுபட்டு வருகிறாள். இந்தச் சந்தர்ப்பத்தில் அவள் தினைப்புனத்தில் காவல் காத்து வருவது அவளுடைய களவு வாழ்க்கைக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. தினைப்புனம் அவர்களுடைய வீட்டிலிருந்து நெடுந் தூரத்திற்கு அப்பால் அமைந்திருக்கிறது, நீண்ட தூரத்தில் அமைந்துள்ள அப்புனத்திற்கும் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வருதல் என்பது இயலாத காரியம். எனவே, தலைவியும் தோழியும் இரண்டொரு பணிப் பெண்களுமே தினைப்புனத்தில் தங்குவார்கள். தினைப்பயிர் அறுவடை ஆகிற வரையில் அவர்கள் புனத்திலேயே தங்கி இருக்க வேண்டும். வீரக்குடியில் பிறந்த பெண்கள் ஆகலின், வேறு ஆண் மக்களின் துணை இன்றி அவர்கள் மட்டுமே அங்குத் தங்கியுள்ளார்கள். ஆண் மக்களின் வாடையே இல்லாமல் ‘அல்லி ராஜ்யம்’ நடத்தும் தலைவி, ஏனைய தோழிகளோடு சேர்ந்து வாழ்க்கையை மிக இன்பமாகக் கழிக்கிறாள். என்றோ ஒரு நாள் அவள் தந்தை மகளைப் பார்த்துவிட்டுப்போக வருவான். மற்றொரு நாள் தாய் வருவாள். பிறிதொரு நாள் தலைவியின் உடன் பிறந்தார் வந்து அவளைக் கண்டு போதலும் உண்டு. அவளுடைய வாழ்க்கை தினைப்புனத்தில் நன்கு நடைபெற இன்றியமையாத பொருள் ஏதேனும் தேவைப்பட்டால், அவர்கள்