பக்கம்:அகமும் புறமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 • அகமும் புறமும்

உடை, பாவனைகள் அனைத்திலுங்கூடச் சில சந்தர்ப்பங்களில் வேறுபாடு தோன்றுவதுண்டு. அம்மாதிரி நேரங்களில் எல்லாம் அந்தப் பைத்தியக்காரத் தாய்க்கு மகள் மேல் ஐயந் தோன்றுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் தங்களைப் பிரிந்து இருப்பதால் இந்த மாறுபாடு ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம் என்று அவள் நினைத்துக் கொண்டு சென்றதும் உண்டு.

தாய் இவ்வாறு வந்து சென்றுகொண்டிருந்த வரை தலைவிக்கு எவ்வித துன்பமும் நேரவில்லை. ஆனால் உலகத்தில் நாம் நினைத்தவை நினைத்தபடி நடை பெறுவதில்லை அல்லவா? அவ்வாறு நடைபெற்றால், இதனை உலகம் என்றுதான் கூறு முடியுமா? ஒரு நாள் தாய் வருவாள் என்று தலைவி சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஏனெனில், முதல் நாள்தான் அவள் வந்து போனாள். எனவே ஊரிலிருந்து ஒருவருமே தன்னைக் காண வரமாட்டார் என்று நினைத்துவிட்டாள் தலைவி. எனவே, தலைவன் வந்தவுடன் அவனுடன் புறப்பட்டு விட்டாள். நேரம் போவதே தெரியவில்லை. அவளுக்கு. மாலை நெடுநேரம் ஆகிவிட்டது. ஏன் அதற்குள் அந்திப் பட்டுவிட்டது என்று கேட்கதான் அவளுக்குத் தோன்றுகிறது. தன்னால் காவல் காக்கப்பட வேண்டிய தினைப்புனம் என்ன கதியாயிற்றோ என்றுகூட அவள் கவலைப் படவில்லை.

அவள் எல்லையற்ற இன்பக்கடலில் திளைத்தபடியே மாலை நேரத்தில் பரணை நோக்கி வந்தாள். பரண் அமைந்திருக்கும் இடத்திற்கு சிறிது தூரம் வரை தலைவனே அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றான். பரண்மேல் ஏறிச் சென்றாள் தலைவி. என்ன வியப்பு! அவள் தாய் அங்கே அமர்ந்திருந்தாள். கால தேவனைக்கூடத் தலைவி அந்த இடத்தில் அஞ்சாமல்