பக்கம்:அகமும் புறமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 • அகமும் புறமும்

தன்மை பெற்றுவிடும். இத்தகைய கடவுட் சுனையை உடைய மலைக்கு அவன் தலைவன். அவனுடைய மலையில் உள்ள இந்தச் சுனையில் மக்கள் செல்வதில்லையாகலின், அங்குத் தேவமாதர்கள் வருவார்களாம். அவர்களைச் ‘சூர் அரமகளிர்’ என்று சங்கப் பாடல்கள் குறிக்கும். அத்தேவ மாதர்கள் அந்தத் தலைவனுடைய மலையில் உள்ள கடவுட் சுனைக்கு வந்து, அங்கு மக்கள் பறிக்க அஞ்சி விட்டுச் சென்ற மலர்களைப் பறிக்கிறார்கள். அப்பூக்களைக் கவிஞன் ‘பறியாக் குவளை’ என்றே குறிப்பிடுகிறான். பறியாக் குவளை என்றால், மக்களால் பறிக்கப்படாத குவளை மலர்கள் என்பது பொருள். மக்களால் தீண்டப்படாத அக்குவளை மலர்களை அத்தேவ மாதர்கள் பறிக்கிறார்கள்; அக்குவளையுடன்சேர்த்துக் கட்டுவதற்காக, இரத்தம் போன்று சிவந்த நிறமுடைய ‘காந்தள்’ பூவையும் பறிக்கிறார்கள்; பிறகு அவை இரண்டையும் அழகு பொருந்தக் கட்டுகிறார்கள், அந்த மாலைகளை அணிந்து கொண்டு அத்தேவ மாதர்கள் ஆடுகிறார்களாம். பலர் சேர்ந்து ஆடும் அந்நாட்டியத்திற்கு இசை வேண்டும் அன்றோ? மலையில் சுனையின் அருகே வீழ்கின்ற அருவி சிறந்த பின்னணி இசையை அமைக்கிறதாம். இயற்கையில் பிறந்து வளர்கின்ற சூர் அரமகளிர் ஆடும் ஆட்டத்திற்கு அருவியின் ‘ஓங்கார’ ஒலி நல்ல பின்னணி இசையாய் அமைந்துவிடுகிறதாம். முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த குறிஞ்சி நிலத்தில், அச்செம்மேனியனுக்கே உரிய மலையில், அவனுடைய சுனை என்று கருதி, மக்கள் நெருங்க அஞ்சுகிற சுனைக்கரையில், அச்சுனையில் பூத்த குவளை மலர்களையும் காந்தட் பூவையும் சூடிக்கொண்டு சூர் அரமகளிர் நாட்டியமாடு கின்றனர், அருவியின் ஓசையைப் பின்னணி இசையாகக் கொண்டு. எனவே, அச்சூர் அரமகளிரும் முருகனுக்கு மிகவும் விருப்பமான அடியார்கள் போலும்!