பக்கம்:அகமும் புறமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 119

தெய்வம் பிடித்துக் கொண்டது என்பதுதான். அவள் தினைப்புனம் காவல் செய்து கொண்டிருந்த அந்த வேளையில், கடவுட்சுனை என்று தெரிந்துகொள்ளாமல் அதில் ஒருவேளை சென்று குளித்து இருக்கலாம். கடவுட் பூ என்பதை அறியாமல் அதைச் சூடி இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் தெய்வம் அவளைத் தீண்டிவிட்டது. அதைத் தணிப்பதற்கு வழி யாது? ஒரே வழிதான் உண்டு. அவளைப் பிடித்த தெய்வக் குற்றம் நீங்கும்படியாக வேலன் வெறியாட வேண்டும். இன்று நாம் பூசாரி என்று கூறும் இனத்தான் அன்று வேலன் என்று வழங்கப்பட்டான். ஊரில் உள்ள பாட்டிமார் அனைவரும் கூடிச் சொன்ன இந்த முடிவைத் தாய் ஏற்றுக் கொண்டாள்.

வெறியாடுதலுக்கு உரிய சகல ஏற்பாடுகளும் ஆகிவிட்டன. ஆனால், இதனால் ஒரு பெரிய இடையூறு தலைவிக்கு உண்டு. உண்மையிலேயே அவளைத் தெய்வம் தீண்டியிருந்தால், வேலன் வெறியாடிய பின் அது தீர்ந்து விடும். ஆனால், அவளைத் தலைவன் அல்லவோ தீண்டியிருக்கிறான்? வெறியாடுவதால் யாது பலன்? மீட்டும் தலைவன் வந்து அவளைத் தொட்டால் ஒழிய அவளுடைய நோய் தீரப் போவதில்லை. எனவே, வெறியாடியும் தலைவியின் நோய் தீரவில்லை என்பதை ஊரார் அறிந்து விட்டால் பழி தூற்றுவார்கள். இவ்வாறு தலைவியை ஐயுற்றுப் பழி தூற்றுதலை ‘அம்பல்’ என்ற பழந்தமிழர் இலக்கியம் பேசுகிறது. கொஞ்சம் ‘கசமுச’ என்று தூற்றப்பெறும் இதுவே பெரிதாகிப் பலரும் வெளிப்படையாகப் பேசும் நிலைமையில் ‘அலர்’ எனப் பெறும்.

இந்த நிலையில் தோழிக்கு வருத்தம் மிகுதிப்பட்டு விட்டது. எவ்வாறாவது அன்னை வெறி எடுப்ப முயல்வதைத் தடுக்க வேண்டும் என்று, அத்தோழி, அன்னை காதில் விழும்படி சில வார்த்தைகளைக் கூறுகிறாள். இதுவே பாடல் அமைந்த விதம்.