பக்கம்:அகமும் புறமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 121

— மிக்க செருக்குடன், கடம்பு—கடம்பம் பூ; கண்ணி—தலைமாலை).

சமுதாயத்தை அறிய தலைவன், தலைவி, தோழி முதலியோரை வைத்து நூற்றுக்கணக்கான அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது ஒரு தலைவி என்போரின் பெயரை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றுகூட இல்லை. அகத்துறை பற்றி எழுந்த பாடல்களில் தலைவன் பெயர் அல்லது தலைவி பெயர் காணப்பெற்றால் அதனை அகத்துள் சேர்க்காமல் புறத்தில் சேர்த்துள்ளனர். அகத்திணைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம், ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறா’ (அகத் திணை:57) என்று ஆணையிடுகிறதாகலின் அகப்பாடல்கள் அனைத்திலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்பெறவில்லை. இது ஏன் என்று சிந்தித்தால் ஓர் உண்மை நன்கு விளங்கும்.

அகப்பாடலில் வரும் தலைவன் தலைவி என்பவர்கள் அன்றைய சமுதாயம் ஒட்டு மொத்தத்திற்கும் குறியீடாக உள்ளவர்கள். அன்றையத் தமிழர்களில் ஓர் ஆண்மகன் தனியனாய்த் தோன்றி அன்பின் அடிப்படையில் ஒரு தலைவியைத் தேடிக் கொண்டான். இருவர் சேர்ந்து வாழும்பொழுது குடும்பம் அமைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. நூறு அல்லது மேற்பட்ட குடும்பங்கள் ஒன்று சேரும்பொழுது புறநிலையில் ஒரு கிராமம் உருவாயிற்று. அந்த கிராமத்தில் வாழ்கின்றவர்கள் அனைவரும் சமுதாயம் என்ற தொகுப்பின்கீழ் இடம் பெறலாயினர்.

சமுதாய வாழ்க்கை என்று வந்தபிறகு, தனி மனிதனுக்குள்ள உரிமைகள் சிலவற்றை இழக்க வேண்டி நேரிட்டது. கூடி வாழும் பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையும் உருவாயிற்று. இதனையடுத்து ஒருவருக் கொருவரும், குடும்பத்திற்குக் குடும்பமும் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கும் உதவவேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. இது எப்படி முடிந்தது: அன்பு என்ற ஒன்றின் அடிப்படையில்தான் தனிக்குடும்பம் சமுதாயத்திற்கு உதவவும், சமுதாயம் தனி ஒருவருக்கு