பக்கம்:அகமும் புறமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 • அகமும் புறமும்

அதிலும் கலை நலம் நிரம்பப்பெற்ற ஒரு பெண்ணினாலா தான் தோல்வியடைய வேண்டும் என்று வியக்கிறான். மென்மையுடைய அப்பெண் தானும் வேறு படைக்கலங்களின் உதவியின்றித் தன் குவளை மலர் போன்ற கண்களால் அல்லவா வெற்றி கொண்டு விட்டாள்? போர் என்றால் ஒருவரை ஒருவர் கோபித்துக் கொண்டல்லவா போரிடுவர்? ஆனால், அப்பெண் சிரித்துக் கொண்டல்லவா வெற்றி பெற்றாள்? குவளை மலர் போன்ற அவளுடைய கண்ணால் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டே வெற்றியடைந்து விட்டாள்.

இனி இத்தனை எண்ணங்களும் தலைவன் மனத்தில் ஊடாடுகின்றன என்பதைக் கவிதை தெரிவிக்கிறது. ‘மலையமான் திருமுடிக்காரி பெரிய யானையின் மேல் ஏறிக்கொண்டு, புலையனின் துடிப்பறை ஒலிக்கப் பகைவருடைய நாட்டில் புகுந்து, அவர்களுடைய அரிய கோட்டையை அழித்து வெற்றிகொண்டு இளைப்பாறியது போல, நெஞ்சே, சிவந்த வேர்களையுடைய கிளைதோறும் தொங்குகிற பலாப் பழத்தின் சுளைகளையுடைய வீட்டு முற்றத்தில் மனைவியானவள் அருவியின் இனிய ஓசையில் உறங்க, சிற்றூரின் சேரியில் வாழும் கைத்தொழில் வல்ல வினைஞன் கையால் அறுத்துச் செய்த சங்கு வளைகள் தன் கையில் அழகுபொருந்த விளங்கும் தலைவியினுடைய குவளை மலர் போன்ற மையுண்ட கண்களில் தோன்றும் மகிழ்ச்சி பொருந்திய நோக்கமானது நம்மை இத் தலைவி பால் செலுத்துகிறது. (அம்மன்னன் வெற்றியின் பின்னர் அயாவுயிர்த்தது போல) நாமும் இவள் உடன்படும் வரை பொறுத்திருப்போம்.’ என்னும் கருத்தமைந்த அக்கவி இது;

‘மலையன்மா ஊர்ந்து போகிப் புலையன்
பெருந்துடி கறங்கம் பிறபுலம் புக்குஅவர்
அருங்குறும்பு எருக்கி அயாவுயிர்த் தாங்கு
உய்த்தன்று மன்னே நெஞ்சே! செவ்வேர்ச்