பக்கம்:அகமும் புறமும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 131

என்று தன் கலையறிவையும் காட்டி அவள் வருத்தத்தையும் போக்கினான். இருவரும் ஓரளவு ஆறுதல் பெற்றுப் பிரிந்து விட்டனர்.

அத்தலைவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். பற்பல அலுவல்களை உடையவன். எனவே, அவனுடைய வேலை காரணமாகச் சில நாட்கள் அத் தலைவியைச் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் மிகவும் அவளுடைய நினைவைப் பெற்றவனாக முன்னர் அவளைச் சந்தித்த இடத்திற்குச் சென்றான். ஆனால், அவளை அங்குக் காண முடியவில்லை. அவனுடைய வருத்தம் மிகவும் அதிகமாகிவிட்டது.என்செய்வதென்று தெரியாமல் வருந்தினான். அவளுடைய ஊர் முதலியன அவனுக்குத் தெரியுமேனும், ஊரினுட்சென்று அவளைப் பற்றி விசாரிப்பது இயலாத காரியம். எனவே, தன் துயரத்தைப் பிறரிடம் கூறி வருத்தத்தை ஆற்றிக் கொள்ளக்கூட முடியாத நிலைமையில் பலமுறை வருவதும் போவதுமாய் இருந்தான்.

இந்நிலையில் தலைவியின் பாடு மிகவும் திண்டாட்டமாகி விட்டது. அவனாவது ஆண்மகன் என்ற முறையில் பல இடங்கட்குச் செல்வதாலும் பலருடன் பழகுவதனாலும் தன் துயரை மறக்கக் கூடிய நிலையில் இருந்தான். ஆனால், அவளோ, பெண்! அவளுடைய வருத்தத்தை வெளியிற்கூடக் கூற முடியவில்லை! என் செய்வாள் பாவம்! அவளுக்கு உயிர்த் தோழி ஒருத்தி உண்டு. அவளிடமாவது கூறித் தன் மன வருத்தத்தை ஆற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால், பலமுறை நினைந்தும் துணிவு பிறக்கவில்லை. ஒருவரிடமும் கூறாமல் தன் துயரத்தைத் தானே பொறுத்துக் கொண்டு வருந்தினாள்.உடல் இளைக்கத்தொடங்கிற்று; உணவு சரியாகச் செல்லவில்லை; பாலும் கசக்கும் நிலைமை அடைந்துவிட்டாள். படுக்கை நோவத் தொடங்கிவிட்டது. இரவில் அவள் நல்ல உறக்கம்