பக்கம்:அகமும் புறமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 • அகமும் புறமும்

பெரிதாகக் கொண்ட நாகரிகம் படைத்த சமுதாயம் வீழ்ச்சியுற்றது–அறிவையே பெரிதாகக்கொண்ட சமுதாயம் வீழ்ச்சியுற்றது. பழந்தமிழன் வாழ்வின் சிறப்பு யாதெனில்: உணர்வு, அறிவு என்ற இவ்விரண்டையும் ஒரு சேர வளர்க்க முற்பட்டமையேயாம்.

அறிவு வளர்ச்சியின் பயன்

மனிதன் அறிவை வளர்ப்பதால் பெறும் பயன் விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல் முதலியவைகளாம். இவற்றின் வளர்ச்சியால் மனிதனின் புறவாழ்வு செம்மையடைந்தது. வெயிலிலும் மழையிலும் அவதியுற்ற மனிதன், வீடு கட்டி, நெருப்பு வளர்த்து வண்டி செய்து வாழக் கற்றுக்கொண்டது விஞ்ஞான அறிவை வளர்த்ததன் பயன். நிலத்திற் கிடைக்கும் பயனை நாளைக்கு வேண்டும் என்று சேமித்து வைத்துப் பிறருக்கும் பகிர்ந்து அளித்து வாழத் தொடங்கியது பொருளாதார அறிவை வளர்த்ததன் பயன். கூட்டங்கூடி வாழத் தொடங்குகையில் ஒருவனைத் தலைவன் என வைத்துக் கொண்டு சட்ட திட்டங்களை ஏற்படுத்தி அவற்றிற்குக் கட்டுப்பட்டு வாழத் தொடங்கியது அரசியல் அறிவை வளர்த்ததன் பயன். இவற்றை மேலும் மேலும் வளர்ப்பதால் மனிதனுடைய அறிவு வளர்ந்தது. மனிதன் நன்முறையில் சமுதாயத்தில் பிறருடன் கூடி வாழும் கலையைக் கற்றுக்கொண்டான். குறைந்த காலத்தில் குறைந்த முயற்சியில் நிறைந்த பொருளைப் பெற்று, நிறைந்த அளவு ஓய்வு நேரத்தையும் பெற வழி செய்து கொண்டான். இவை யாவும் அறிவு வளர்ச்சியால் அவனுடைய புறவாழ்வு பெற்ற பயன்களாகும்.

இனி, மனிதனால் தோற்றுவிக்கப் பெறும் நூல்களும் இரு வகைப்படும். ஒரு வகை, அறிவின் துணை கொண்டு ஆக்கப்பெறும் அறிவியல் நூல்கள். ஏனையவை உணர்வின் துணைகொண்டு செய்யப் பெறும் உணர்வு நூல்கள்.