பக்கம்:அகமும் புறமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 133

கொடாமலும் பேசினாள். தலைவன் பாடு போதும் போதும் என்றாகி விட்டது. இறுதியாக அவன் தன் வருத்தம் முழுவதையும் வெளியிட்டான். அதிலும் பயன் இல்லாமற் போய்விடவே,தலைவன் தான் மடல் ஏறப் போவதாகவே கூறினான்.

மடல் ஏறுதல் என்பது அக்காலத்து வழக்கம். ஒரு தலைவன் தன்னால் விரும்பப்பட்ட தலைவியை மணந்து கொள்ள முயல்வான். ஆனால், சுற்றத்தார், தோழி முதலிய யாராலாவது தடை ஏற்படுமாயின், தன் தலைவியினிடம் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை வெளியிட மடல் ஏறுவதும் உண்டு. இலக்கியத்தில் காணப்பெறும் இம்மடல் ஏறும் வழக்கம் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை அறிதற்கில்லை.இலக்கிய இலக்கணங்களிற் கண்டபடி மடல் ஏறுதல் என்பது வியப்பைத் தரக்கூடியதாம்.பனை மரத்தின் கருக்கினால் செய்யப் பெற்ற குதிரை ஒன்றின் மேல் தலைவன் ஏறிக் கொள்வான். தலைவியினுடைய உருவம் தீட்டப் பெற்ற ஓர் ஓவியம் அவனது கையில் இருக்கும். தலைவியினுடைய ஊரில் சென்று அவளுடைய பெற்றோரும் சுற்றத்தாரும் இருக்கும் இடத்தின் எதிரேசெல்வான். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவ்வூரில் உள்ள சிறு பிள்ளைகளை விட்டு அக்குதிரையை இழுக்கச் செய்வான். பனங்கருக்கினால் செய்யப் பெற்ற குதிரையாதலின், அது தலைவனுடைய தொடையைக் கிழிக்கும். அவனுடைய தொடையிலிருந்து உதிரம் பெருகும். இக்கொடுமையைக் காணச் சகியாத சுற்றத்தார், அத்தலைவியினுடைய பெற்றோரைக் கேட்டு அப்பெண்ணை இத்தலைவனுக்கே மணம் முடிக்க ஏற்பாடு செய்வர். தலைவன் தலைவியினுடைய படத்தை எழுதிக்கொண்டுதான் அக்குதிரையில் ஏற வேண்டும் என்ற இந்தக் கட்டுப்பாடு இலக்கியத்தில் மிகஅழகான சில பாடல்கள் தோன்றவும் காரணமாயிற்று.