பக்கம்:அகமும் புறமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 • அகமும் புறமும்

இல்லாததுபோலவே நடந்து கொள்கின்றனர். அக்குறை பொருட்குறைதான்.வேண்டுமான அளவு பொருள் வசதி இல்லை. தலைவனுக்குப் பெரிய பெரிய குறிக்கோள்கள் உள்ளன. இவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமாயின், நிறையப் பொருள் வேண்டும். ஆனால், வீட்டிலே இன்றியமையாதவற்றை வாங்கக்கூடப் பொருள் முட்டுப்படுகிறது. தலைவனுக்கு உள்ளூரப் பெரிய கவலைதான். ‘என்ன செய்தால் இக்கவலை தீரும்!’ என்று ஆராய்ந்தான். முடிவாக, ‘வெளியூர் சென்று பொருளீட்ட வேண்டும்,’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

அவன் ஏதோ செயற்கரிய காரியத்தைச் செய்யத் துணிந்துவிட்டவன் போல மகிழ்ச்சி அடைந்தான். ஆனால், இம்மகிழ்ச்சி மிகச் சிறிது நேரமே தங்கியிருந்தது. ஏன் எனில், ‘பொருள் தேடுதல்’ என்றாலே வெளிநாடு செல்ல வேண்டும் என்பதுதானே பொருள்? வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அது எத்துணைப் பெரிய காரியம் அந்த நாட்களில்? வெளிநாட்டில் வாழும் அந்த நாட்களில் என்ன தனிமை! நினைத்த பொழுதே நெஞ்சு நடுங்கும் தனிமை! ஏன்? அங்கு மக்களே இல்லையா? இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், தான் பல காலம் பழகிய தன் சுற்றத்தாரையும் உயிரினும் இனிய காதலியையும் விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய அந்தத் தனிமை! தலைவியை விட்டுப் பிரிவதை நினைத்தாலே போதும், பொருள் சேகரிப்பதில் உள்ள மகிழ்ச்சி எல்லாம் காற்றாய்ப் பறந்து விடும். ஆனால், இப்பொழுது தலைவன் வீட்டிலேதான் இருக்கிறான். தலைவியின் இன்பத்தில் ஈடுபட்டிருக்கையில் ஒரோவழிப் பொருள் இல்லாத கவலை வந்து குறுக்கிடுகிறது.

இவ்வாறு பலவிதமான எண்ணங்கட்கு இடையில் அவதிப்பட்ட தலைவன், அன்று குளக்கரையில் அமர்ந்து தன் எண்ணங்களை ஓடவிட்டிருக்கிறான். ‘தலைவி,