பக்கம்:அகமும் புறமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 139

பொருள் தேடப் பிரிவு’ என்ற இரண்டின் இடையே நடைபெற்ற போராட்டத்தில் ஒருவிதமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் நேற்றைப் பொழுதில். எவ்வாறாயினும் கடமையை நிறைவேற்றப் போவதுதான் ஆண் மகனாகிய தனக்கே முறை என்பதை உணர்ந்தான். தலைவியின் மாட்டுக் காதலில் திளைக்கும் அவனுடைய நெஞ்சங்கூட அவன் செய்யத் துணிந்ததே முறையானது என்று கூறிற்று. இனித் தடை என்ன? எவ்வாறாயினும் பொருள் தேடப் போய்விடலாம் என்ற முடிவுடனேதான் நேற்றைப் பொழுது முழுவதும், ஏன்–இன்று குளக்கரைக்கு வரும் அளவும் தலைவன் உறுதி பூண்டிருந்தான்.ஆனால், இப்பொழுது குளத்தினுள் பார்த்துக் கொண்டிருக்கையில் ...! ஆ! ஈதென்ன புதுமை! அவன் இதுவரை காணாத ஒன்றைக் கண்டுவிட்டானா? ஆம்! அவனுடைய உறுதி எல்லாம் குலைந்து விட்டது போன்ற ஒரு முகக்குறிப்பு இதோ வெளிப்படுகிறது. தலைவன் இதோ வாய்விட்டுப் பேசுகிறான்:

............................ பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பன்
ஓடுமீன் வழியில் கெடுவ . . . . .

(நற்றிணை–16)

(பொருளானது, வாடாத தாமரை போன்ற மலர்களை உடைய குளத்தின் நடுவே மீன்கள் ஓடும் பொழுது உண்டாகின்ற வழியைப் போல அழியத்தக்கது)

அதாவது, மீன்கள் ஓடும்பொழுது வழி உண்டாவது போலத் தோன்றி, அம்மீன்கள் அப்பாற்சென்ற மறு விநாடியே வழி என்ற ஒன்று இல்லாது போய்விடுகிறதன்றோ? அது போலப் பொருள் என்பதும் பாடுபட்டுத் தேடும் பொழுது நிறையச் சேர்வது போலத் தோன்றிப் பிறகு தான் இருந்த இடமும் இல்லையாக மறைந்துவிடும் ஒன்றாகும். இதனை வாய்விட்டுத் தலைவன் கூறிக்-

10