பக்கம்:அகமும் புறமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 7

இவற்றையே இலக்கியம் என்று கூறுகிறோம். முதல் தொகுப்பில் உள்ளனவாகிய அறிவியல் நூல்கள் கால தேச வர்த்தமானங்களால் மாறுபவை. ஓரளவு எல்லையுடைய அறிவின் திறங்கொண்டு ஆக்கப்பெறும் இந்நூல்கள், மக்கள் சமுதாயம் அறிவு வளர்ச்சி பெற்ற பிறகு தங்கள் பயனை இழந்து விடுகின்றன. விஞ்ஞான உலகின் திறவு கோல் என்று கூறப்பெற்ற ‘நியூட்டனின்’ இயக்கச் சட்டங்கள் (Laws of motion) ‘ஐன்ஸ்டின்’ தோன்றிய பிறகு ஐயுறுதற்கும் ஏதுவாய்விட்டன. அன்றைய அறிவுநிலையில் உண்மையாகக் கருதப்பெற்ற ஒன்று, இன்றைய அறிவு நிலையில் மாறிவிட்டது. உடைக்க முடியாதது என்று கருதி ‘அணு’ (atom) என்று பெயரிட்டார் டால்டன் என்ற பெரியார் நுண்மைப் பொருளுக்கு அன்றைய அறிவுத் திறத்துக்கு அது சரி. ஆனால், இன்றைய அறிவு நிலை, அணுவைத் துளைத்து அதனுள் ஓர் உலகத்தையே காண்கிறது. நேற்றுவரை உண்மையென்று கருதப்பட்ட ஒன்று இன்று பொய்யாவதைக் காண்கிறோம். இன்றைய உலகம் உண்மை என்று நம்புவது நாளை உலகால் எள்ளவும் நகையாடவும் படலாம். இங்ஙனம் வளர்ச்சியடைந்த இந்நூல்கள் அனைத்தும் அறிவின் துணைக் கொண்டு மட்டும் ஆக்கப்பெற்றவை. உணர்விற்கு இங்கு வேலையே இல்லை. உணர்வின் உதவியின்றித் தோன்றும் இவற்றால் ஓரளவு நற்பயன் விளைவது உண்டாயினும், தீப்பயனும் தோன்றத்தான் செய்கிறது. அணுவைத் துளைத்து மின்அணு, பரமாணுவாகப் பிரித்தால் பயன் உண்டா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கத் தீப்பயன் உடன் விளைந்துவிட்டது. உணர்வின் உதவி இன்றி அறிவின் பயனாகத் தோன்றினமையாலேதான் அணுவைத் துளைக்கும் ஆராய்ச்சி அணுகுண்டில் முடிந்தது. உணர்வும் அறிவும் சேர்ந்து வளர்ந்திருந்தால், இவ்வாறு 'அணுகுண்டு தோன்றி இருப்பினும், அது ‘நாகசாக்கி,