பக்கம்:அகமும் புறமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 • அகமும் புறமும்

என்று நினைந்து சென்று விட்டால், தலைவியினிடத்துப் பெறும் இன்பம் கைகூடாது. ஆனால், இரண்டினும் இன்பம் அடையக்கூடும் நீ. இங்கிருந்தால் தலைவியிடத்தே இன்பம் பெறுவாய். இவளை விட்டுப் பொருள் தேடச் சென்றாலோ, அவ்விடத்தும் இன்பம் பெறுவாய். ஆனால், என்னைப் பொறுத்தவரை இவளை விட்டு நீங்கிவிட்டால் இன்பம் பெறுவது இயலாத காரியம். அப்படித்தான் இவளை விட்டுத் தேடப் போகிற பொருள் இவளைப்போல நிலைத்த இன்பத்தைத் தரக் கூடியதா என்ன? அதுவும் இல்லை. வாடாத பூக்கள் நிறைந்த குளத்தினிடத்து மீன்கள் ஓடும்பொழுது தோன்றும் வழியைப் போலத் தோன்றி, உடன் மறைந்துபோம் இயல்புடைய இப்பொருளுக்காக, நிலைபெற்ற இவள் இன்பத்தைத் துறக்க என்னால் இயலாது. நீ வேண்டுமானால் அப்பொருளைத் தேடிச் செல்க. யான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். பெரிய கடலால் சூழப் பெற்ற இவ்வுலகை மரக்காலாகக் கொண்டு ஏழு முறை அளக்கக்கூடிய அளவு பெரும் பொருளைப் பெறுவதாயினும், நான் தலைவியை விட்டு வரமாட்டேன். கனமான குழையைக் காதுகளில் அணிந்த அவள் குளிர்ச்சி பொருந்திய செவ்வரி பரந்த தன் கண்களால் அடிக்கடி என்னைப் பார்க்கிறாள். அப் பார்வையால் தாக்குண்ட நான் இனி வரமாட்டேன்! இனி அந்தப் பொருள் எக்கேடாயினும் கெட்டுப் போகட்டும்! அப்பொருளை விரும்பிச் செல்வார்மாட்டு அது தங்கி வாழட்டும்!’

இந்த முறையில் பொருள்படத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுகிறான்:


புணரின் புணராது பொருளே; பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
சேர்பினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழிஎன் நெஞ்சே! பொருளே