பக்கம்:அகமும் புறமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 143


வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடுமின் வழியில் கெடுவ; யானே
விழுநீர் வியல்அகம் தூணி ஆக
எழுமாண் அளக்கும்விழுநிதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனன்,
எனைய ஆகுக! வாழிய பொருளே!

(நற்றிணை –16)

(புணரின்–தலைவியிடம் தங்கினால்; புணராது–சேராது; ஆயிடைச் சேர்பினும்–பொருள் தேடும் அவ்விடம் சேர்ந்தாலும்; நல்லதற்கு உரியை–உனக்கு இன்பம் கிட்டும்; விழுநீர்–கடல்; வியல் அகம்–அகன்ற உலகம்; தூணி–மரக்கால் என்னும் இரண்டு படி கொண்ட ஓர் அளவு; சேயரி–சிவந்த வரிகள்; அமர்ந்தினிது நோக்கம்–இனிய பார்வை; செகுத்தனன்–இவள் பார்வையால் என் ஆற்றல் அழிந்தேன்.)

இவள் இன்பத்தில் வெறுப்படையாமல் முதுமைப் பருவம் வரையில் இங்குத் தங்கிவிட்டால் பிறகு பொருள் தேடல் முடியாது என்ற கருத்தைத் தலைவன், ‘புணரின் புணராது பொருளே,’ என்றும், பிரிந்து சென்றுவிட்டால் இவள் இறந்துவிடுவாளாகலின், இனி வந்தபொழுது இவள் இன்பம் கிடைக்காது என்ற கருத்தைப் ‘பொருள் வயின் பிரியின் புணராது புணர்வே,’ என்றும் கூறி, அந்நெஞ்சுக்குக் குறிப்பாக ‘நீயும் இங்குத் தங்க வேண்டுவதே முறை’ என்று கூறுமுகமாக, ‘நல்லதற்கு உரியை’ என்று கூறின அழகு மீட்டும் ஒருமுறையன்றிப் பன்முறை படித்து மகிழத் தக்கதன்றோ!

இதே கருத்துப்படக், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர், பட்டினப்பாலை என்றதொரு பெரிய பாடலைப் பாடியுள்ளார். கரிகால் பெருவளத்தானுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையைப் பலபடியாக