பக்கம்:அகமும் புறமும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 147

ஆறு அறிவு படைத்த மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடு யாது என்பதாவது உனக்குத் தெரியுமா?

நெஞ்சு:–அறிவே என்ன? கடமை, மனிதன், மிருகம் என்று ஏதேதோ கதைக்கின்றாயே! தலைவியைப் பற்றி நீ நினைத்துப் பார்த்ததுண்டா? கடமையைப் பற்றிப் பெரிய சொற்பொழிவு செய்ய வந்துவிட்டாயே! தலைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி உனக்கு ஏதாவது நினைவுக்கு வருகிறதா?

அறிவு:–நன்றாக நினைவுக்கு வருகிறது! தலைவி மட்டும் எனக்குச் சொந்தம் இல்லையா? அவளுக்கு ஓரளவு துன்பம் தந்துவிட்டது உண்மைதான். ஆனால், அவள் வருத்தப்படாமல் இருக்க வேண்டும் என்று அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மற்றக் கடமைகள் என்ன ஆகும்?

நெஞ்சு:–என்ன அப்படி மற்றக் கடமைகளை மறந்து விட்டது? வீட்டுக்கு முக்கியம் தலைவிதானே! அறிவே! அவள் இல்லாத பொழுது இல்லறம் என்பது இல்லையே! இப்பொழுது நீ பேசும் கடமைகள் எங்கிருந்து வந்தன? ஆகவே, உன் இல்லறம் நடைபெறுவதற்கு மூலகாரணமான தலைவியை மறந்துவிட்டுக் கடமைகள் என்று கூறிக் கொண்டு திரிவதில் பயன் இல்லை என்பது உனக்குத் தெரியுமா?

அறிவு:–ஆனால், தலைவியை இன்பமாக வைத்துக் கொள்வதற்கு மட்டும் நாம் இல்லறம் தொடங்கவில்லை. வீடு வைத்தவுடன் எத்தனையோ புதிய பொறுப்புக்கள் தோன்றுகின்றன. நீ கூறும் அந்தத் தலைவி மகிழ்ச்சியாக எப்பொழுது இருக்க முடியும்? வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கும்பொழுது அடுப்பில் பூனை படுத்துக்கொண்டிருந்தால் தலைவி மகிழ்ச்சியாக இருப்பாளா? இல்லை