பக்கம்:அகமும் புறமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 • அகமும் புறமும்

ஹிரோஷிமா’ மக்கள் தலையில் விழாமல் சமுதாய நன்மைக்குப் பயன்பட்டிருக்கும்.

அறிவின் உதவியால் மட்டுமே தோன்றும் பொருள்கள், அவ்வறிவு வளர்ச்சி பெற்றபின் பயன்படாமல் ஒழிவதைக் கண்டோம். ஆனால், பின்னர்க் கூறப்பெற்ற உணர்வின் அடிப்படையில் தோன்றும் இலக்கியம் இவ்வாறு பயனற்றுப் போவதில்லை. எத்துணைக் காலஞ் சென்றாலும், மக்கள் சமுதாயம் எவ்வளவு அறிவு வளர்ச்சியடைந்தாலும், இவை பழமையானவை என்று கருதப் படுவதில்லை. ஒரு காலத்து வாழ்ந்த மக்கட்கு மட்டுமே விரும்பத்தக்கதாய் இருந்தது என்று கூறுவதற்கில்லாமல் எக்காலத்தும் எவ்விடத்தும் வாழும் மக்கள் அனைவருக்கும் விரும்பத்தக்கதாய் இருந்தது என்று கூறுவதற்கில்லாமல் எக்காலத்தும் எவ்விடத்தும் வாழும் மக்கள் அனைவருக்கும் விரும்பத்தக்கதாய் உள்ள பெருமை இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு. சுருங்கக் கூறின், காலதேச வர்த்தமானம் கடந்த ஒன்றாய் மிளிர்வது உணர்வின் பயனாகத் தோன்றும் இலக்கியம் என்னலாம்.

உணர்வு வளர்ச்சி

உணர்வு வளர்ச்சியாலேதான் மனிதனுடைய மனம் நிறைவடையவேண்டும். எத்துணை அறிவை வளர்த்துக் கொண்டு போனாலும், மனம் நிறைவடையாது. இது கருதியே போலும் தாயுமானவ அடிகளார்,

சினம்இறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம்இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே!
                                                 - (பராபரக்கண்ணி, 169)

என்று கூறிப்போனார்! அறிவு வளர்ச்சியால் மட்டும் மனநிறைவடைய முடியாது என்பதற்கு அமெரிக்கா, இரஷியா போன்ற மேனாடுகள் உதாரணமாகும். இத்-