பக்கம்:அகமும் புறமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 • அகமும் புறமும்

அன்பு ததும்புகிறது! வீர்னுடைய உடற்கட்டு அமைந்த அவனுடைய முகத்தில் இவ்வளவு அன்பும் குழைவும் எங்கிருந்து பிறந்தன? ஐயமே இல்லை! இந்தப் பெண்ணிடம் திரும்பிப் பேசுந்தோறும் அவனுடை முகத்தில் அன்பும் அருளும் காட்சி அளிக்கின்றன. இப்படி ஒரு பெண்ணிடம் பேசும் பொழுதெல்லாம் ஒருவனுடைய முகத்தில் அன்பு தோன்றுமாயின், அவன் அவளுடைய காதலன்தான் என்று முடிவு செய்யலாம்.

இந்தப் பெண்ணைப் பார்த்தால், இவளிடம் இளமை தாண்டவமாடுகிறது. இவளுடைய உடல் அமைப்பில், பெரிய குடும்பத்தில் வசதியுடன் வளர்ந்த பொலிவு காணப்படுகிறது. இப்படிப்பட்டவள் இவ்வாறு கடுமையான வெயிலில் நடந்து பழகியிருத்தல் இயலாது. எனவே, இவள் கால்கள் சூடு தாங்காமல் தள்ளாடுகின்றன. இவள் படும் பாட்டைக் கண்ட இவளுடைய காதலன் நின்று நின்று இவளுக்கு ஏதோ அமைதி கூறுகிறான். விளையாட்டாகப் பேசி, இவளை மகிழ்விக்கிறான். இவளுடைய கவலையை மறக்க வைக்க அவன் அரும்பாடு படுகிறான் என்பது நன்றாகத் தெரிகிறது.

இவளும் அவனிடம் பெருங்காதல் கொண்டுள்ளாள் என்பதில் ஐயமில்லை. அன்றேல், இக் கடுவெயிலின் கொடுமையை மறந்து, அவனுடைய சொற்களில் ஈடுபட்டு இவ்வாறு தன்னை மறந்து இவள் சிரிக்க இயலுமா? இத்துணைத் துன்பத்தையும் இவள் மறக்க வேண்டுமாயின் அவனுடைய சொற்களில் இவளுக்குள்ள ஈடுபாடு அளவற்றதாய் இருக்க வேண்டும். ஏன் இவ்வாறு இக்காதலர்கள் இந்த நேரத்தில் செல்ல வேண்டும்? அது ஒரு கதை.

இத் தலைவனுக்கும் தலைவிக்கும் நெடுநாட்களாகவே பழக்கம் உண்டு. முதன்முதலில் இவர்கள் இருவரும் எங்கு