பக்கம்:அகமும் புறமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 153

எவ்வாறு சந்தித்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. இவன், இவள், இவளுடைய உயிர்தோழி ஆகிய மூவருக்கு மட்டுமே அது தெரியும். ஆனால், இத் தலைவியினுடைய சுற்றத்தார் இவர்களிடையே திருமணம் நடைபெறவிட மாட்டார்கள் என்பதைத் தோழி அறிந்து கொண்டாள். வேறு வழியாது? மற்றொருவனுக்கு இப்பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடுகளும் செய்துவிட்டனர் இவர்களுடைய சுற்றத்தார். நிலைமை மிகவும் மோசமாகி விடும் போலத் தோன்றலாயிற்று. தோழி பார்த்தாள்; தலைவி வேறு ஓர் ஆடவனை மணத்தல் என்பது இயலாத காரியம். அத்தகைய நிலைமை ஏற்பட்டால் இவள் இறந்துபடுவாளே தவிர அப்புதியவனை மணக்க இசையமாட்டாள். என்றாலும் தலைவியின் சுற்றத்தார்களும் தலைவியின் நிலையைப் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்.

இந்நிலையில் தோழிக்கு இரண்டே வழிகள் தெரிகின்றன. ஒன்று தலைவியின் விதிப்படி ஆகட்டும் என்று விட்டுவிடுவது. இரண்டாவது, பலரும் தன்மேல் ஐயங்கொண்டு பகைமை பாராட்டுவார்கள் என்று அறிந்து இருந்தும் அதுபற்றிக் கவலையடையாமல், தலைவிக்கு அவள் விரும்பியவனை அடையுமாறு உதவுவது. எந்தத் தோழியும் தலைவியை முதல் வழியில் விடமாட்டாள். அவள் இறந்துபட நேர்ந்தால், இதைவிடக் கொடுமை வேறு யாது? எனவே இரண்டாவது வழிதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் தோழி. தன்னுடைய சுற்றத்தார் நிறைந்துள்ள இந்த ஊரில் தலைவி விரும்பியவனை மணந்துகொள்ளுதல் என்பது இயலாத காரியம். எனவே, தலைவனுடன் தலைவி ஓடிவிட வேண்டும். இவ்வாறு தலைவனுடன் தலைவி ஓடுவதை ‘உடன் போக்கு’ என்று இலக்கியம் கூறும். மேனாட்டார் இதனை இதே பொருளில் ‘Elopement’ என்று வழங்குவதும் அறிதற்குரியது.