பக்கம்:அகமும் புறமும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 • அகமும் புறமும்


தோழியின் உதவியால் தலைவி தலைவனுடன் ஒரு நாள் விடியற்காலையில் தன் ஊரையும், தாய் தந்தையரையும், சுற்றத்தாரையும் விட்டுவிட்டு ஓடிவிட்டாள். முதல் நாள் மாலைப்பொழுது வரை அந்த வீட்டில் வாழ்பவர்கட்கு இதுபற்றி ஒரு குறிப்பும் தெரியவில்லை. இப்பெண்ணின் தாய்க்கு இவள் ஒரே பெண். வேறு ஆண் மக்கள் இருக்கலாம். எனினும் சீராட்டித் தன் மகள் என்று கூறி ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைக்க வேறு பெண்ணும் இல்லை! என் செய்வாள் அத்தாய்.

மறுநாள் பொழுது விடிந்ததும் மகளைத் தேடினாள். யாண்டும் காணவில்லை. தோழியை விசாரித்தாள், தனக்கு யாதொன்றும் தெரியாது என்று தோழி கூறிவிட்டாள். தோழிதான் தலைவியின் உடன்போக்குக்கு உதவி செய்தாள். எனினும், அவளே இப்பொழுது ஒன்றும் தெரியாதவள் போலத் தலைவியைக் காணவில்லையே என்று அழத் தொடங்கிவிட்டாள்! போதாக்குறைக்கு ஊரில் உள்ள பெண்டிர் அனைவரும் வந்து கூடிவிட்டனர்.

ஒவ்வொருவரும் தத்தம் கவலையை ஓரளவு தெரிவித்துக் கொண்டனர். சிலர் அத்தாயைத் தேற்ற முற்பட்டு விட்டனர்; இது ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையில் இயல்புதான் என்பதை எடுத்துக்காட்டினர்; அறவழியும் இதுதான் என்றும் எடுத்துக் கூறினர். எவ்வளவு சிறப்புடன் பெற்று வளர்த்தாலும், பெண்ணைப் பெற்றுவிட்டால் ஒருவனிடம் ஒப்படைக்கத்தானே வேண்டும்? இவ்வாறு அவர்கள் பலபடியாக எடுத்துக்கூறியும் தாய்க்குக் கவலை நீங்கவில்லை. சிலர் காரண காரியத்துடன் உவமைகள் கூறியும் அவள் கவலையைப் போக்க முயன்றனர். ஒருத்தி கூறினாள் பின் வருமாறு:

“அம்மா, நல்ல மணம் வீசுகிற சந்தனம் மரமாக மலையிலேதான் பிறக்கிறது என்றாலும், தான் பிறந்த மலையில் இருக்கும் வரை மலைக்கு அது பயன்படுவ-