பக்கம்:அகமும் புறமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 157

பெற்றேன். அவளும், போரில் மிக்க வலிமை காட்டும் கூரிய வேலாயுதத்தையுமுடைய காளை ஒருவனோடு கடும் பாலைவனத்தின் வழியே சென்றுவிட்டாள். அவளே சென்றுவிட்டமையின் யான் அவள்மேல் கொண்டிருந்த ஆசையை மறக்கிறேன். எனினும், அவளுடன் பழகியதை மறக்க முடியவில்லை. ஆனால், நீங்கள் கவலையை மறக்குமாறு சொல்கிறீர்கள். அந்த ஒரே மகளை எவ்வாறு மறப்பது? கண்ணுள் வாழும் பாவை வெளியே வந்து நடை பயில்வது போன்ற என் மகள், நீலமணி போன்ற பூக்கள் பூக்கும் நொச்சிச் செடியின் அருகில் விளையாடியதையும் அவள் விளையாடிய திண்ணையையும் எவ்வாறு என்னால் மறக்க முடியும்? நினைத்தாலும் நெஞ்சு வேகிறது!”

ஒருமகள் உடையேன் மன்னே அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்;
இனியே,

தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று
யாங்ஙனன் ஒல்லுமோ அறிவுடை யீரே!
உள்ளின் உள்ளம் வேமே; உண்கண்
மணிவாழ் பாவை நடைகற்று அன்னஎன்
அணிஇயல் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் கண்டே

(நற்றிணை–184)

(செரு–போர்; மொய்ம்பு–வலிமை; நெருநல்–நேற்று, ஒல்லுமோ–முடியுமோ உண்கண் மணி வாழ்பாவை–கண்ணினுள் வாழும் பாவை; தெற்றி–திண்ணை)

“மகள் சென்ற பாலையை நினைத்து வீட்டில் நிழல் தரும்நொச்சியையும் திண்ணையையும் பார்த்தால் வருத்தத்தால் நெஞ்சு வெடிக்கிறதே!” என்றாள் அப்பெற்ற தாய்.