பக்கம்:அகமும் புறமும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 • அகமும் புறமும்


‘குடி வறன் உற்ற கொழுநன்’ தலைவியின் தனிக் குடித்தனத்தில், அவள் உறுதியைப் பற்றிப் பேசும் பாடலைப் பார்ப்போம்;

ஒரு பெரிய மாளிகை விண்ணைத் தொட்டு நிற்கிறது. அது மிகப் பெருஞ் செல்வருடைய வீடென்பது கண்ட மாத்திரத்தில் யாரும் அறிந்துகொள்ளுதல் கூடும். வீட்டின் வெளி முற்றத்தில் பெரியதொரு தென்னங்கீற்றுப் பந்தல் போடப்பட்டிருக்கிறது. வீட்டின் சொந்தக்காரர் பொருட் செல்வம் பெற்றுள்ள அளவுக்கு மக்கட்செல்வம் பெறவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லாவிடில், இதோ வீட்டு வாயிலை விட்டு வெளியே வரும் இந்த ஒரு பெண் குழந்தையைப் பாருங்கள். எவ்வளவு சிறந்த ஆடைகள், கண்டீர்களா? இவ்வளவு சிறிய குழந்தைக்கு இப்படி வைரத்தால் இழைத்து நகைகள் போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் குழந்தையைப் பார்த்து முன் ஒரு காலத்தில் ஒரு கவிஞன் ‘நல்கூர்ந்தார் செல்வமகள்’ என்று கூறிப்போனான். அதன் பொருள் விளங்குகிறதா? ‘நல்கூர்ந்தார்’ என்பதற்கு வறுமையுடையவர் என்பது பொருள். வறுமையுடையவர்கட்கு எவ்வாறு செல்வ மகள் இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம் நியாயமான கேள்விதான். ஆனால், ‘வறுமை’ எதில் ஏற்பட்டது என்று அறியவில்லையே! செல்வம் நிறைய உடையவர்கள். ஆனால், மக்கட்செல்வத்தில் வறுமையுடையவர்கள் என்பதே பொருள். ‘ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு’ என்று கூறுவார்களே! அது போல ஒரே ஒரு குழந்தையை அருமையாகப் பெற்று உள்ளார்கள். இங்கே நாம் காணும் அம்மை இக்குழந்தையைப் பெற்ற தாயல்லள். ஆனால், தாயின் இடத்தில் இருந்து வளர்க்கும் செவிலித் தாய் ஆவாள். ஆம் ‘நற்றாய்’ என்று கூறப்படும், பெற்ற தாய்க்கு அடுத்தபடி இருப்பவள், ‘செவிலித் தாய்’ என்று கூறப்படும் இந்த வளர்க்கும் தாய்தானே? ஆதலாலேதான் இவ்வளவு உரிமையுடன்